துர்பான், ஹிஜாப் உட்பட்ட சமய அடையாளங்களை அணிவதை அமெரிக்க இராணுவம் அங்கீகரிக்கக்கூடும்.
யூதர்கள் தலையில் அணியும் யார்முல்க் தொப்பிகள், சீக்கியர்களின் துர்பான்கள், தாடிகள், ஹிஜாப்கள் ஆகியவற்றை அமெரிக்காவின் பாதுகாப்புப் படையினர் அணிவது அனுமதிக்கப்படலாம் என்கிறது ஜனாதிபதியினால் அதுபற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவொன்று. படையின் வெவ்வேறு பகுதிகளில் கடமையாற்றுகிறவர்களின் மத நம்பிக்கையின் அடையாளங்களான அவற்றை இராணுவச் சீருடையுடன் சேர்த்துக்கொள்வதை அனுமதிக்கலாம் என்கிறது அந்தக் குழுவின் பரிந்துரை. 1981 இன் அமெரிக்க இராணுவத்தினரின் கட்டுப்பாடுகளின் மூலம் அவை இதுவரை தடை செய்யப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராணுவத்தின் காலாட்படையும், விமானப்படையினரும் 2017, 2020 இல் தமது சீருடைக் கட்டுப்பாடுகளை மாற்றிக்கொண்டனர். அவற்றில் பணியாற்றுகிறவர்கள் விரும்பினால் தமது மத அடையாளங்களைக் காட்டும் சின்னங்களை அணிந்துகொள்ளலாம். கடற்படையினரின் அதிகாரம் 1981 இன் கட்டுப்பாடுகளின்படி மத அடையாளங்களை அணிவதைத் தடுக்கும் சீருடைகளுடனேயே இயங்கி வருகிறது.
“நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் தமது மத அடையாளங்களைக் காட்டும் சின்னங்களைச் சீருடைகளுடன் அணிவதைக் காலாட்படையும், விமானப்படையும் அனுமதித்திருக்கும்போது கடற்படையினர் மத நம்பிக்கையுள்ள ஒரு சாரார் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட விரும்புவ்தைத் தடுத்து வருகிறது. அது அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமைகளை மீறுவதாகும்,” என்று சுட்டிக்காட்டியிருக்கிறது அமெரிக்க ஜனாதிபதியால் இவைபற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட குழு.
சாள்ஸ் ஜெ. போமன்