ஹிஜாப் கட்டாயத்தை எதிர்க்கும் எழுச்சியில் ஈரானில் 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

சுமார் ஒரு வாரத்தையும் தாண்டி ஈரானிய மக்களின் அரசுக்கெதிரான எழுச்சி அதிகரித்து வருகிறது. ஈரானிய அரசு தனது கலவரங்களை அடக்கும் பொலீஸ் படையை உபயோகித்து வருகிறது. மக்களின் குரல் கலாச்சாரப் பொலீசாரின் பாதுகாப்பில் இறந்த 22 வயதுப் பெண்ணின் இறப்புக்கெதிராக எழுந்த ஆரம்ப நாட்களில் மெத்தனமாக இருந்த அரசு படிப்படியாகத் தனது வன்முறையிலான ஒடுகலை அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. ஈரானியர்கள் – முக்கியமாகப் பெண்கள் – பொலீசாரின் வன்முறையை நேருக்கு நேர் எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். இரண்டு பக்கத்தினருக்குமான மோதல்களில் இறந்தோரின் எண்ணிக்கை 50 க்கும் அதிகமாகியிருக்கிறது. 

ஒஸ்லோவை மையமாகக் கொண்டு இயங்கும் ஈரானிய மனித உரிமை அமைப்பொன்று நாட்டில் நடப்பவைகளை உலகுக்கு வெளிப்படுத்தி வருகிறது. ஈரானிய அரசு நாட்டின் இணையத்தளத்தை  முடக்கியிருக்கிறது. மாஷா அமினியின் இறப்புக்காகக் கொதித்தெழுந்திருப்பவர்கல் நாட்டின் வெவ்வேறு பகுதியில் நடந்துவரும் போராட்டங்களை ஒழுங்குசெய்து தமக்குள் கருத்துக்களைத் திட்டங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிலைமை அதனால் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் பல பிரச்சினைகளுக்காக மக்கள் குரல்கொடுக்க ஆரம்பிக்கும்போதெல்லாம் அரசு அதை அடக்குவதற்காக இணையத்தளத்தை முடக்கி, கலவரப்பொலிசாரின் முழு வன்முறையைப் பிரயோகித்து ஆயிரக்கணக்கானோரைக் கொன்றொழித்திருக்கிறது. அதனால், தற்சமயம் அரசு செய்திருக்கும் இணையத்தள இருட்டடிப்பைப் பலரும் அச்சத்துடனேயே எதிர்கொண்டிருக்கிறார்கள்.

அதே சமயம் அமெரிக்க அரசு ஈரானிலிருந்து செயற்படும் இணையத்தளங்களின் கட்டுபாடுகளைத் தளர்த்தியிருக்கிறது. அதன் மூலம் ஈரானிய மக்கள் தமக்கிடையே தொடர்புகளை இறுக்கிக்கொண்டு அரசுக்கெதிராகக் குரல்கொடுப்பதை உற்சாகப்படுத்தவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய அரசு வெளியிட்டிருக்கும் செய்திகளின்படி மக்களின் போராட்டங்களால் நாட்டின் பொலீசார் உட்பட 26 பேர் இறந்திருக்கிறார்கள். மனித உரிமைக்குழுக்களின் அறிக்கைகள் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை ஏற்கனவே 50 ஐத் தாண்டியிருப்பதாகக் குறிப்பிடுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *