ஈரானிய காற்றாடி விமானங்களை ரஷ்யா பாவிப்பதனால் உக்ரேனிலிருக்கும் ஈரானியத் தூதுவருக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்படலாம்.
உக்ரேனில் இருக்கும் ஈரானிய அரசின் தூதுவராயத்துக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டு, அங்கே பணியாற்றுகிறவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கி எச்சரித்திருக்கிறார். அதன் காரணம் சமீப காலத்தில் ஈரானில் தயாரிக்கப்பட்ட காற்றாடி விமானங்களை UAV) ரஷ்யா பாவித்து உக்ரேனைத் தாக்க, உளவு பார்க்க முற்படுவதாகும் என்று குறிப்பிட்ட அவர் இதுவரை தமது இராணுவம் சுமார் 8 ஈரானியக் காற்றாடி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
“ஒடெஸ்ஸா நகரைத் தாக்க ஈரானில் தயாரிக்கப்பட்ட இரண்டு காற்றாடி விமானங்கள் ரஷ்யாவால் பாவிக்கப்பட்டன. கிழக்கு, தெற்கு உக்ரேன் பாதுகாப்புப் படைகளிலிருந்தும் இதேபோன்ற செய்திகள் வந்திருக்கின்றன. அவைகள் மீது வேண்டிய நடவடிக்கை எடுக்கும்படி நாம் உத்தரவிட்டிருக்கிறோம். எங்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலேயே நாம் ஈரானின் தூதுவராலயம் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்,” என்கிறார் செலென்ஸ்கி.
இதேபோன்ற குற்றச்சாட்டுக்கள் உக்ரேன், அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம் ஆகியவற்றால் முன்வைக்கப்பட்டது. ஈரானிய அரசோ தாம் ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் எதையும் விற்கவில்லை என்று உறுதியாக மறுத்து வருகிறது. போரில் தாம் எந்த ஒரு பகுதியினரின் பக்கமும் சார முற்படவில்லை என்றும் ஈரான் குறிப்பிடுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்