மதிப்பிழந்துவரும் யென் நாணயத்துக்கு மிண்டுகுடுத்து நிமிர்த்தத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்தார்.
ரஷ்யா – உக்ரேன் போரின் விளைவால் உண்டாகியிருக்கும் பக்க விளைவுகளில் ஒன்றான பணவீக்கத்தால் உலகமெங்கும் பல நாடுகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான பொருளாதாரப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் அமெரிக்க டொலருக்கு எதிராக மதிப்பிழந்துவரும் நாணயங்களில் ஜப்பானிய நாணயமான யென்னும் ஒன்றாகும். இரண்டு தசாப்தங்களாகப் பலமாக இருந்துவந்த யென் தற்போது தளம்பிக்கொண்டிருக்கிறது.
யென் மதிப்புக் குறைவதால் ஏற்பட்டிருக்கும் இறக்குமதிப் பொருட்களின் விலையேற்றம் ஜப்பானியர்களின் வாழ்க்கைச்செலவை அதிகரித்திருக்கிறது. எனவே 1998 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக ஜப்பானிய அரசு பணச்சந்தையில் தம்மிடமிருந்த அமெரிக்க டொலர்களை விற்று யென்னைக் கொள்வனவு செய்து அதன் மதிப்புக்கு மிண்டுகொடுத்தது.
“பணச்சந்தையில் யென்னின் வீழ்ச்சியைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து அதைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது எங்கள் திட்டம். அதை நாம் தொடரவிருக்கிறோம்,” என்று ஜப்பானிய நிதியமைச்சர் ஷுனிக்கி சுஸூக்கி பத்திரிகையாளர்களைக் கூட்டித் தெரிவித்தார்.
அமெரிக்க மத்திய வங்கி சமீப காலத்தில் தமது கடன்கொடுக்கும் வட்டியை அடுத்தடுத்து உயர்த்தியிருக்கிறது. அதன் காரணம் அமெரிக்காவில் ஏற்பட்டு வரும் பொருட்களின் விலையுயர்வும், அமெரிக்க டொலரின் மதிப்புயர்வுமாகும். அதன் பக்க விளைவாக மற்றைய நாணயங்கள் பல பலமிழந்து வருகின்றன. பிரிட்டிஷ் பவுண்டு, எவ்ரோ, சீனாவின் யுவான் ஆகிய நாணயங்களும் டொலருக்கு எதிராகப் பலமிழந்து வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்