ரஷ்ய – ஜேர்மன் எரிவாயுவழிக் குளாயில் மூன்று இடங்களில் கசிவு உண்டாகியிருக்கிறது.
ஐரோப்பாவுக்கு ரஷ்யா தனது எரிவாயுவை விற்பதற்காக உண்டாக்கிய நோர்த்ஸ்டிரீம் 1, 2 ஆகிய இரண்டு குளாய்களிலும் மூன்று வெவ்வேறு இடங்களில் கசிவுகள் ஏற்பட்டிருப்பதாக டனிஷ் கடல்வழிப்பாதை கண்காணிக்கும் திணைக்களம் செய்தி வெளியிட்டிருக்கிறது. ரஷ்யாவுக்கும் ஜேர்மனிக்கும் இடையே பால்டிக் கடலின் ஊடாக அந்தக் குளாய்கள் போடப்பட்டிருக்கின்றன. ஜேர்மனியில் திங்களன்றே வெளியாகியிருக்கும் செய்திகளின்படி எரிவாயுக்குளாய்களிரண்டிலும் அழுத்தம் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அந்தக் கசிவுகள் சாதாரணமாக ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் ஜேர்மனிய அரசு குறிப்பிட்டிருக்கிறது.
நோர்த்ஸ்டிரீம் 1 எரிவாயுவழி சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னரே பாவனையிலிருந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. ஜேர்மனி தம்மிடம் வாங்கும் எரிவாயுவுக்கு ரூபிள் நாணயத்தில் பணம் செலுத்தாதலால் அவர்களுக்கும், ஐரோப்பாவுக்கும் அக்குளாய் மூலமாக எரிவாயு கொடுக்க முடியாது என்று ரஷ்யா சொல்லிவிட்டது. நோர்த்ஸ்டிரீம் 2 பாவனைக்கு வரமுன்னரே அதற்குள் எரிவாயு நிறைக்கப்பட்டுவிட்டது, ஆனால், உக்ரேன் மீதான போர் அச்சமயம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதால் அதைப் பாவனைக்குட்படுத்த ஜேர்மனி மறுத்துவிட்டது.
குளாய்களில் கசிவு ஏற்பட்டிருக்கும் பகுதி டென்மார்க்கின் ஆளுமைக்குள் இருக்கிறது. அப்பகுதியில் போக்குவரத்திலிருக்கும் கப்பல்களைக் குறிப்பிட்ட குளாய்க்கு மிக அதிக தூரத்திலேயே போகும்படி டென்மார்க் கேட்டுக்கொண்டிருக்கிறது. அத்துடன் கசிந்துவரும் எரிவாயுவானது அப்பகுதியில் கணிசமான அளவு சுற்றுப்புற சேதத்தையும் உண்டாக்கும் என்று டென்மார்க் கணித்திருக்கிறது.
ஜேர்மனியிலிருந்து வரும் ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் குறிப்பிட்ட கசிவுகளுக்கான காரணம் அவை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது என்பதே. அதுபற்றிய ஆராய்வுகளைச் செய்யவிருக்கிறது ஜேர்மனி. அந்த நடவடிக்கைகள் முடிவடைய ஓரிரு வாரங்களாகலாம். அது உடைக்கப்பட்டிருப்பின் சேதங்களைச் சரிப்படுத்துவதற்காக நீர்மூழ்கிக்கப்பலின் உதவியுடனேயே அதைச் செய்யமுடியும்.
சாள்ஸ் ஜெ. போமன்