“மகாராணிக்கு விருப்பமான பொருட்கள்” சின்னம் போட்ட பொருட்கள் அச்சின்னத்தை இழக்கும் அபாயம்.
மறைந்த மகாராணிக்கு விருப்பமான பொருட்கள் என்ற பட்டியலில் இருக்கும் பொருட்களுக்கான அடையாளச் சின்னத்தைச் சுமார் 600 பொருட்கள் பெற்றிருந்தன. அவர் இறப்பின் மூலம் அவை அந்தச் சின்னத்தின் பாவிப்பு உரிமையை இழக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது. அவர்கள் அரசன் சார்ள்ஸின் அனுமதியைப் பெற்ற பின்னரே இனிமேல் அதைத் தொடரலாம்.
Fortnum and Mason மகாராணியால் விருப்பத்துக்குரிய மளிகைக்கடை, சில்லறை வியாபாரிகள் என அங்கீகாரம் பெற்றிருக்கிறார்கள். அதே சமயம் தேயிலை வியாபாரம், மளிகைக்கடைக்காக இளவரசராகச் சார்ள்ஸ் இருந்தபோது “விருப்பத்துக்குரியவர்கள்,” என்று சின்னம் பெற்றிருக்கிறார்கள். கார்ட்பெர்க் இனிப்புகள், புளுபெரி மழைக்கான உடைகள் போன்றவையும் மகாராணியின் விருப்பப்பட்டியலில் இருக்கின்றன.
அரசகுடும்பத்தினரின் விருப்பப்பட்டியலின் சின்னத்தைப் போட்டு விற்பனை செய்வது கௌரவத்தை மட்டுமன்றி வியாபாரத்தையும் அதிகப்படுத்துகிறது. ஆனால், அதன் பெறுமதியை பணமதிப்பால் குறிப்பிட முடியாது. இளவரசர் என்ற ஆளுமையுடன் சார்ள்ஸ் சுமார் 150 பொருட்களுக்குத் தனது விருப்பத்துக்கான சின்னத்தைப் பாவிக்கும் உரிமை கொடுத்திருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசகுடும்ப விருப்பத்துக்குரியது என்ற சின்னத்தைத் தமது விற்பனையில் பாவிப்பதற்குரிய உரிமையை நிறுவனங்கள் பெற்றால் அது ஐந்து வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அச்சமயத்தில் அவர்களுடைய தயாரிப்பு முதல் விற்பனை வரையில் குறிப்பிட்ட அளவு தரமும் எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்டுப்பாடுகள், தரம் ஆகியவை சமீபத்தில் மேலும் இறுக்கமாக்கப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்