தஞ்சாவூரில் களவுபோன உலகின் முதலாவது தமிழ் வேதாகமம் லண்டன் அருங்காட்சியகம் ஒன்றில் இருக்கிறது.
தஞ்சாவூரிலிருக்கும் சரஸ்வதி மஹால் வாசிகசாலையிலிருந்து 2005 இல் உலகின் முதலாவது வேதாகமம் களவெடுக்கப்பட்டது. அச்சமயம் அங்கே வந்திருந்த ஒரு வெளிநாட்டுக் குழுவால் அது களவாடப்பட்டதாகக் கருதப்படுகிறது. அந்த வேதாகமம் லண்டனின் அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதாகத் தெரியவந்ததிலிருந்து அதை மீண்டும் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துவருகின்றன.
அச்சமயம் தஞ்சாவூர் அரசனாக இருந்த துலாஜி ராஜா செர்போஜி அவர்களுக்கு அந்த வேதாகமம் பரிசாகக் கொடுக்கப்பட்டிருந்தது. 2017 இல் சரஸ்வதி மஹால் வாசிகசாலையின் சார்பில் அது காணாமல் போனதற்காக முறையீடு செய்யப்பட்டது. அதையடுத்து அதைத் தேடுவதற்காக ஒரு பொலீஸ் குழு ஏற்பாடு செய்யப்பட்டது. அதைக் களவாடியவர்கள் பார்த்தலோமியஸ் ஸீகன்பால்க்கின் ஞாபக நிகழ்ச்சியொன்றுக்கு வந்திருந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
நாகப்பட்டினத்திலிருக்கும் தரங்காம்பாடிக்கு கிறீஸ்தவ புரொட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புவதற்காக 1706 இல் டென்மார்க்கிலிருந்து இரண்டு பேர் வந்திருந்தனர். பார்த்தலோமியஸ் ஸீகன்பால்க், ஹெய்ன்ரிச் பிள்சாவ் [Bartholomaeus Ziegenbalg, and Heinrich Plueshau] ஆகியோரே அவ்விருவரும். ஸீகன்பால்க் அங்கே ஒரு அச்சகத்தை நிறுவி 1715 ம் ஆண்டில் வேதாகமத்தின் ஒரு பகுதியான புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்துப் பிரசுரித்தார்.
காணாமல் போய்விட்ட வேதாகமம் பற்றி இணையத்தளங்களில் செய்தி பரப்பப்பட்டது. அதன் மூலம் உலகின் பல அருங்காட்சியகங்களுடனும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. லண்டன் அருங்காட்சியகத்தில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்களிடையே மறைத்து வைக்கப்பட்ட வேதாகமம் கண்டுபிடிக்கப்பட்டு ஆராயப்பட்டபோது அதில் ராஜா செர்போஜியின் கையெழுத்து காணப்பட்டது.
கலாச்சாரச் சொத்துக்கள் பற்றிய யுனெஸ்கோ ஒப்பந்தப்படி குறிப்பிட்ட வேதாகமம் லண்டன் அருங்காட்சியகத்திலிருந்து மீண்டும் தஞ்சாவூருக்குக் கொண்டுவரப்பட்டு சரஸ்வதி மஹால் வாசிகசாலையில் பாதுகாக்கப்படும்.
சாள்ஸ் ஜெ. போமன்