இன்று இருள்காலத்துக்காக ஐரோப்பிய நாடுகளில் நேரம் ஒரு மணி நேரம் பின் நோக்கி வைக்கப்படுகிறது.
புலம்பெயர்ந்து வாழ்பவர்களில் பலர் தமது சொந்த நாடுகளில் வாழ்பவர்களுடன் தினசரி உரையாடி மகிழ்வதுண்டு. வர்த்தகத்தில் சர்வதேசத் தொடர்புகள் கொண்டவர்களும் தமது நாடு, கண்டங்களில் எல்லைகளைத் தாண்டி உரையாட வேண்டியிருக்கிறது. ஐரோப்பாவின் நாடுகளில் குளிர்காலத்தை ஒட்டியும், இலைதுளிர் காலத்தை ஒட்டியும் நேரம் மாற்றி வைக்கப்படும்போது அது எல்லோரையும் தடுமாற வைக்கிறது.
வெளிச்சமாக இருக்கும் நேரம் குறைவாக இருக்கும் குளிரகாலத்தில் ஒளி தெரிவதற்கு காலையில் நேரமாகுமாதலால் நேரம் ஒரு மணி நேரம் பின்னோக்கி வைக்கப்படுகிறது. இலையுதிர்காலத்திலோ படிப்படியாகச் சூரியன் பிரகாசிக்கும் நேரம் அதிகரிப்பதால் நேரம் முன்நோக்கி வைக்கப்படும். குளிர்காலத்தில் நேரம் மாறும்போது ஒரு மணி நேரம் அதிகமாகக் கிடைக்கிறது. அந்த ஒரு மணி நேரத்தை அடுத்த வருடம் இலையுதிர்காலம் ஆரம்பிக்கும்போது திருப்பியெடுக்கப்படுகிறது.
இது வழக்கமாக வருடாவருடம் நடப்பதே எனினும் நேரம் மாற்றபடும்போது முதல் ஒரிரு வாரங்களில் மனிதர்கள் தமது உடலியலிலான வழக்கங்களை மாற்றிக்கொள்வதற்கு கஷ்டப்படுகிறார்கள். உதாரணமாகக் குளிர்காலத்தில் நேரம் மாற்றியவுடன் ஒரு மணித்தியாலம் முன்னராகவே தூக்கம் வந்துவிடும். நேரம் மாற்றப்படுவது பல வழிகளிலும் அந்தந்த நாடுகளின் அதிகாரங்களால் அறிவிக்கப்பட்டாலும் கூட அதைக் கவனிக்கத் தவறிவிடுபவர்கள் பலர். டிஜிடல் கடிகாரங்களின் இந்த யுகத்தில் பெரும்பாலான கடிகாரங்கள், இயந்திரங்கள் தாமாகவே அந்த மாற்றத்தைச் செய்துகொள்வது பளுவை ஓரளவு குறைக்கிறது.
இப்படியாக வருடத்தில் இரண்டு தடவைகள் நேரத்தை மாற்றிவைக்கும் நாடுகளில் வாழும் மனிதர்கள் மட்டுமல்ல காட்டு விலங்குகளுக்கும் அது ஒரு பிரச்சினையாகவே இருப்பதாக உயிரியல் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். விலங்குகள் நீரருந்த, உணவு தேட அலையும்போது வீதிகளைக் குறுக்கிடுவதற்கான நேரத்தைப் பழகிக்கொண்டிருக்கின்றன. வாகனங்கள் அதிகமாகப் போக்குவரத்தில் இல்லாத நேரத்தில் அவை வீதிகளைத் தாண்டுவது வழக்கம். நேரம் மாற்றப்பட்ட முதல் ஓரிரு வாரங்களுக்கு விலங்குகளுக்கு அது தெரிவதில்லை. எனவே அவை தமது உடலியல் ரீதியாகப் பழகியபடி வீதிகளின் குறுக்கே சென்று வாகனங்களால் மோதப்பட்டு விபத்துகளை உண்டாக்குவது அதிகமாகிறது. புள்ளிவிபர ரீதியாக விலங்குகள் – வாகனங்கள் விபத்துகள் நேரம் மாற்றப்பட்ட முதல் வாரங்களில் அதிகமாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது என்று தமது கூற்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள் உயிரியல் வல்லுனர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்