நட்சத்திரங்கள் பெலே, மரடோனாவைக் கௌரவிப்பதற்காக 2030 ம் ஆண்டு உலகக்கோப்பை தென்னமெரிக்காவில் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை.
2022 ம் ஆண்டு உலகக்கோப்பை மோதல்கள் கடைசிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. அடுத்த உலகக்கிண்ண மோதல்கள் 2026 இல் அமெரிக்காவில் என்று திண்ணமாகிவிட்டது. அதற்கடுததாக 2030 ம் ஆண்டு அந்த மோதல்களை நடத்தும் கௌரவத்தைத் தென்னமெரிக்காவுக்கு வழங்கவேண்டும் என்று தென்னமெரிக்க நாடுகளின் உதைபந்தாட்ட அமைப்பின் தலைவர் அலெஹாந்திரோ டொமிங்கோஸ் ஞாயிறன்று கோரிக்கை விடுத்திருக்கிறார். அவ்விளையாட்டின் ஜாம்பவான்களான பெலே, மரடோனா ஆகியோரைக் கௌரவிப்பதற்காக அதைச் செய்யவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அதே வருடம் உலகக்கோப்பைகளை நடத்துவதற்கான விண்ணப்பத்தை ஏற்கனவே ஸ்பெய்ன், போர்த்துக்கால், உக்ரேன் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து முன்வைத்திருக்கின்றன. அதற்கான ஆதரவை சர்வதேச உதைபந்தாட்ட அமைப்பு வழங்கியுமிருக்கிறது. அதற்குப் போட்டியாக சவூதி அரேபியா, எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து 2030 போட்டிகளை நடத்தத் தயாரென்று அறிவிக்கப்போவதாக செய்திகள் அடிபட்டு வருகின்றன.
“உதைபந்தாட்ட விளையாட்டுகளுக்குக் கௌரவம் தேடித்தந்த வேர்களை நாம் மறக்கலாகாது. அவ்விளையாட்டுப் போட்டிகள் அதிக பணம் கொடுப்பவர்களுக்குத்தான் கிடைக்கும் என்ற நிலைமையை மாற்றவேண்டும்,” என்கிறார் அலெஹாந்திரோ டொமிங்கோஸ்.
முதன் முதலாக உலகக்கிண்ணத்துக்கான மோதல்களை 1930 இல் நடத்திய உருகுவே பக்கத்து நாடுகளான ஆர்ஜென்ரீனா, சிலே, பரகுவாய் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து 2030 ம் ஆண்டு மீண்டும் அவ்விழாவை நடத்தவிரும்புகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்