நூறு ஆண்டுகளில் மோசமான பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டது துருக்கி.
துருக்கியில் ஏற்பட்டிருக்கும் பூமியதிர்ச்சியானது 1930 களுக்குப் பின்னர் நாட்டைத் தாக்கிய தீவிரமான நிலநடுக்கம் என்று விபரிக்கப்படுகிறது. ஏற்கனவே சில நூறு பேர் இறந்துவிட்டதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் படங்கள் கலகலத்து விழும் கட்டடங்களையும் அவைகளிலிருந்து இரவு உடுப்புக்களுடன் திகிலுடன் வெளியேயிருக்கும் பனிக்குள் வெறுங்காலுடன் ஓடிவரும் மக்களையும் காட்டுகின்றன.
துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியானது எல்லையைக் கடந்து சிரியாவிலும் தாக்குதல்களை ஏற்படுத்தியிருக்கிறது. மீட்புப் படையினர் பாதிக்கப்பட்ட இடங்களில் தமது உதவிகளைச் செய்யும்போது இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டலாம் என்று குறிப்பிடப்படுகிறது.
வருடத்துக்கு ஐந்து பூமியதிர்ச்சிகளையாவது எதிர்கொள்ளும் நாடு துருக்கி. அவைகள் பெரும் அழிவுகளை ஏற்படுத்துவதில்லை. துருக்கி கிட்டத்தட்ட ஒரு கண்ட ஓட்டில் தனியாக இருக்கிறது. புவிக்கோளின் உள்ளே ஏற்படும் இயற்றை நிகழ்வுகளால் ஓட்டுப்பகுதிகள் வெவ்வேறு திசைகளை நோக்கி விலகும்போது நிலநடுக்கங்கள் அங்கே ஏற்படுகின்றன. அதனால், துருக்கி பொதுவாகவே தனது நாட்டில் அப்படியான இயற்கை அழிவுகளுக்கான மீட்பு, உதவிப் பணிகளைச் செய்வதற்கான தயார் நிலையிலேயே இருக்கிறது.
7.4 magnitude நிலநடுக்க அளவு என்று நில அதிர்வுகளைக் கணக்கிட்டு வரும் ஆராய்ச்சி மையங்கள் குறிப்பிடுகின்றன. சுமார் 100 மைல் தொலைவுவரையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. இத்தாலின் கடற்கரையை ஒட்டி வாழ்பவர்களுக்கு சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. கரைப்பகுதியில் பெரும்பாலானவர்கள் வசிக்கும் நகரங்களில் அரை மீற்றர் உயர சுனாமி அலையே பெரும் பாதிப்புக்களை உண்டாக்கலாம் என்று எச்சரிக்கை கூறுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்