அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கும் இரண்டாவது வேட்பாளர் ஒரு பெண்.
அடுத்துவரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் சார்பில் வேட்பாளராகும் போட்டியில் இரண்டாவதாகக் குதித்திருக்கிறார் ஒரு பெண். டொனால்ட் டிரம்ப் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்கத் தூதுவராகச் செயற்பட்ட நிக்கி ஹேலி பெப்ரவரி 15 ம் திகதியன்று தான் போட்டியில் இறங்குவதாகத் தெரிவித்தார். சவுத் கரோலினாவில் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் அதன் முதலாவது பெண் ஆளுனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். அந்த மாநிலத்தின் சார்ல்ஸ்டன் நகரில் அவர் தனது வாக்கு வேட்டையை ஆரம்பித்தார்.
ரிபப்ளிகன் கட்சி தனக்குள் பலமாகப் பிரிந்திருக்கிறது. டொனால்ட் டிரம்ப் கடந்த தேர்தலில் தோற்றதிலிருந்தே கட்சியின் சார்பில் நிதியொன்றை ஆரம்பித்து அதில் கணிசமான தொகையைச் சேர்த்துக் கட்சியில் ஒரு பகுதியினரைத் தனது பிடிக்குள் வைத்திருக்கிறார். தன்னை எதிர்ப்பவர்களைக் கடுமையாகத் தாக்கும் அவருடன் மோதுவதற்குத் தொடர்ந்தும் கட்சிக்குள் தயக்கம் இருந்துவரும் நேரத்தில் அவரால் சர்வதேசத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிக்கி ஹேலி வேட்பாளராகக் குதித்திருப்பது பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
ஹிக்கி ஹேலியின் பெற்றோர் சீக்கியர்களாகும். அவர்கள் முதலில் கனடாவுக்கும் பின்னர் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் குடிபெயர்ந்தவர்களாகும். தந்தை அஜித் சிங் ரந்தாவா பஞ்சாப் விவசாயத்துறைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். தாயார் ராஜ் கௌர் ரந்தாவா ஒரு சட்டத்துறையில் உயர்கல்வி கற்றவர். தனது இந்தியப் பின்னணியைப் பெருமையுடன் குறிப்பிடும் Nimrata “Nikki” Randhawa 1972 ம் ஆண்டு பிறந்தவர். அரசியலில் இன்னொரு தலைமுறையைச் சேர்ந்தவர்.
“எங்கள் கட்சி தோற்றுப்போவதைக் கண்டு தளர்ந்தவர்களா நீங்கள்? உங்கள் வாக்கை இன்னொரு தலைமுறையைச் சேர்ந்த எனக்குத் தாருங்கள்!” என்று ரிபப்ளிகன் வாக்காளர்களிடம் வேண்டுகிறார் ஹேலி. “ஒருவர் அரசியலில் பங்குபற்றுவதற்குரிய ஆரோக்கியத்துடன் இருக்கிறாரா என்று கட்டாயமாகப் பரிசீலிக்கவேண்டும்,” என்று கூறி 76 வயதான டிரம்ப், 80 வயதான ஜோ பைடன் ஆகியோரையும் தாக்கினார்.
ஹேலி தன்னை அறிவித்துக்கொண்ட சில மணி நேரத்திலேயே டொனால்ட் டிரம்ப் பகுதியினர் அவரது கொள்கைகளைச் சாட ஆரம்பித்தனர். ரிபப்ளிகன் கட்சியினர் புனிதமானதாகக் கருதும் சமூக ஆரோக்கிய பாதுகாப்புக் காப்புறுதியை ஹேலி உடைத்தெறியத் திட்டமிட்டிருக்கிறார் என்றும் ஹிலரி கிளிண்டன் தனது விருப்பத்துக்குரிய அரசியல்வாதி என்று போற்றியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
சாள்ஸ் ஜெ. போமன்