ஆண்மையை அதிகரிப்பதற்கான பானங்கள்| போலி ஆய்வு முடிவுகள்
இளைஞர்களை ஆண்மையை அதிகரிப்பதாக ஏமாற்றி ஆரோக்கியமற்ற பானங்களை அருந்த வைக்கும் போலி ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின்றன.
கொக்கோ கோலா மற்றும் பெப்சி பானங்களை அருந்துவோரின் விதைகளின் பருமன் அதிகரிப்பதாகவும் அவர்களுடைய ஆண்மைக்குரிய டெஸ்டோஸ்டீரோன் ஓமோன் அதிகரிப்பதாகவும் விஞ்ஞான ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டதாக கடந்த சில தினங்களாக பல்வேறு ஊடகங்களிலும் இணையதளங்களிலும் கோலா பானங்களின் விற்பனையை அதிகரிக்கும் கபட நோக்கத்துடன் ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை ஆராய்ந்தபோது சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் எலிகளை மூன்றாக பிரித்து ஒரு குழுவுக்கு தண்ணீரும் இன்னொரு குழுவுக்கு கொக்கோகோலாவும் மூன்றாவது குழுவுக்கு பெப்சி பானமும் வழங்கப்பட்டு முதல் நாளில் இருந்து 15 நாள் வரை தொடர்ச்சியாக குருதியில் டெஸ்டோஸ்டீரோன் ஓமோன் மற்றும் விதைகளின் பருமன்கள் அளவிடப்பட்டு கொக்கோகோலா மற்றும் பெப்சி பானங்களை அருந்திய எலிகளில் விதைகளின் பருமன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் ஓமோன் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டது.
இந்த ஆய்வின் முடிவுகள் மனிதர்களுக்கு ஏற்புடையவையா என்பதை இதன் தொடர்ச்சியாக மனிதர்களில் அதே விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமாகவே நிரூபிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய ஆய்வுகள் எதையும் மனிதர்களில் மேற்கொள்ளாமல் மனிதர்களிலும் கொக்கோகோலா மற்றும் பெப்சி பானங்கள் விதையின் பருமன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் ஓமோனை அதிகரிக்கும் என்று கூறுவது மோசடியாகும்.
2010ம் ஆண்டு டென்மார்க்கில் தினந்தோறும் 1 லிட்டர் கொக்கோகோலாவை அருந்தும் 2500க்கு மேற்பட்ட இளைஞர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கோலா பானம் அருந்தாதவர்களை விட அருந்தியவர்களில் விந்துக்களின் எண்ணிக்கை 30 சத வீதத்தால் குறைவதாக அறியப்பட்டது.
மேலும் கோலா பானங்கள் எலும்புகளை பலவீனமாக்கி எலும்புக்கோறை (osteoporosis) நோய் உட்பட ஆரோக்கியத்துக்கு ஒவ்வாத பல விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மனிதர்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே தவறாக வழிநடத்தும் ஆய்வு முடிவுகளை ஏற்றுக் கொண்டு ஆரோக்கியத்துக்கு ஒவ்வாத கோலா பானங்களை அருந்த வேண்டாம் என்று கேட்பது மட்டுமே ஆரோக்கியமான கருத்தாகும்.
உண்மையில் இயற்கையாக டெஸ்டெஸ்டிரோன் ஓமோனை அதிகரிக்கும் வழிகள் இவை மட்டும் தான்.
- இனிப்பான நிறை அதிகரிக்கும் உணவுகளை தவிர்த்தல். அதேவேளை ஆரோக்கியத்துக்கு உரிய வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உள்ளெடுக்க வேண்டும்
- போதுமானளவு உடற்பயிற்சி
- போதுமானளவு நித்திரை
- மனஉளைச்சலை கட்டுப்படுத்துதல்.
- நீரிழிவு உட்பட நோய்களை கட்டுப்படுத்துதல்.
- மதுபான பாவனையை நிறுத்துதல்
எழுதுவது : Dr முரளி வல்லிபுரநாதன்,
சமுதாய மருத்துவ நிபுணர்