சிறைச்சாலையில் இருந்து அதிபர் மாளிகைக்கு | டியோமாயே பாயே –
சுவிசிலிருந்து சண் தவராஜா
ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்கள் சிறைக் கொட்டடிக்கு அனுப்பி வைக்கப்பட்டதையும், சிறை வைக்கப்பட்டவர்கள் அதிபர் மாளிகைக்குச் சென்றதையும் உலகின் பல நாடுகளில் பார்த்திருக்கிறோம். அடக்குமுறை ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டு, சிறையில் இருந்தவாறே நியமனப் பத்திரம் தாக்கல் செய்து, பொது மன்னிப்பின் கீழ் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, பத்தே நாட்களில் தேர்தலில் வெற்றிபெற்று அரசுத் தலைவர் ஆகிய அதிசய நிகழ்வு ஒன்று மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் நிகழ்ந்துள்ளது. 44 வயது நிரம்பிய மேனாள் வருமான வரி மதிப்பீட்டாளரான பசிரோ டியோமாயே பாயே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
மார்ச் 24ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் 54.28 விழுக்காடு வாக்குகளைப் பெற்று, முதல் சுற்றிலேயே அவர் வெற்றியைப் பெற்றுள்ளார். முதல் தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அவர் இத்துணை பாரிய வெற்றியைப் பெற்றிருப்பது ஆபிரிக்கக் கண்டத்தின் ஜனநாயகப் பாரம்பரியத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடப்படுகின்றது.
பிரான்சின் முன்னாள் குடியேற்ற நாடான செனகல் நாட்டின் குடித்தொகை 18,384,660. குடிமக்கள் தொகை மிக வேகமாக அதிகரித்துவரும் இந்த நாட்டில் 25 ஆண்டுகளுக்கு ஒரு தடவை குடித்தொகை இரண்டு மடங்காக அதிகரித்து வருகின்றது. பிராந்தியத்தில் அதிக அளவான வெளிநாட்டு நிதயுதவியைப் பெறும் இந்நாட்டில் 18 முதல் 35 வயது வரையான இளைஞர்களுள் மூவரில் ஒருவர் வேலைவாய்ப்பு இன்றி இருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
2012 முதல் 2024 வரை அதிபராகப் பதவி வகித்த மக்கி சால் தனது பதவியின் இறுதிக் காலத்தில் மேற்கொண்ட அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் அவருக்கு எதிராக மக்களின் ஆத்திரத்தைக் கிளப்பியிருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் தலைமை அமைச்சராகப் பதவி வகித்த அமடு பா என்பவரைக் களமிறிக்கினார். 35.79 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அவரால் இரண்டாவது இடத்தையே பிடிக்க முடிந்தது.
70 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்ட செனகலில் 61.30 விழுக்காடு வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்திருந்தார்கள். இந்தத் தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் களமிறங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் தானோ தனது கட்சியோ வெற்றிபெற முடியாது என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்த சால், எதிரணியில் இருந்த தனது போட்டியாளர்களைக் குறிவைத்தார். பொய் வழக்குகளைச் சோடித்து அவர்களைச் சிறையில் தள்ளினார். தனக்குரிய சிறப்புரிமையையும் நாடாளுமன்றப் பெரும்பான்மையையும் வைத்துக் கொண்டு இந்த வருடம் பெப்ரவரி 25இல் நடந்திருக்க வேண்டிய தேர்தலை 15 டிசம்பருக்குத் தள்ளி வைத்தார். ஆனால் மக்களின் கொதிப்பும், செனகல் அரசியலமைப்பு அவையும் அவரது கனவு நிறைவேறத் தடையாக இருந்தன. சாலின் பதவிக் காலம் முடிவடையும் ஏப்ரல் 2ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடிக்குமாறு பெப்ரவரி 15இல் அரசியலமைப்பு அவை தீர்ப்பு வழங்கியிருந்தது. பொதுமக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்களை தேர்தலுக்குப் 10 நாட்கள் முன்னதாக விடுதலை செய்ய வேண்டிய சூழலை உருவாக்கியது.
எதிர்க்கட்சி வரிசையில் மிக முக்கியமானவர் ஒஸ்மனே சங்கோ. தொழில், விழுமியம் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்கான செனகலின் ஆபிரிக்க தேசபக்தர்கள் என்ற கட்சியை இவர் 2014ஆம் ஆண்டு பாயோவுடன் இணைந்து தொடங்கினார். ஒன்றாகச் சட்டம் படித்த இந்த இருவரும் வருமான வரி மதிப்பீட்டாளர்களாக உத்தியோகம் பார்த்த வேளையிலேயே கட்சியைத் தொடங்கினர். ஊழல் கறை படியாத இருவரும் ஊழலுக்கு எதிராகத் தொடங்கிய கட்சி கலைக்கப்பட்ட நிலையிலும் குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்தது மாபெரும் சாதனையே.
2017 முதல் 2022 வரை நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய இவர் 2019இல் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 16 விழுக்காடு வாக்குகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இளைஞர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கைக் கொண்டிருந்த இவரது கட்சி படிப்படியாக முன்னேறி எதிர்க்கட்சி வரிசையில் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக வளர்ச்சிபெற்றது. 2022இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இவர் மாநகர முதல்வராகத் தெரிவானார்.
சகோதர கட்சிகளுடன் இணைந்து ‘நம்பிக்கைக்கான ஐக்கியம்’ என்ற பெயரில் கூட்டணி ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு 165 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 56 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டார்.
கட்சியின் முகவரியாகவும், ஆளுங் கட்சியின் போட்டியாளராகவும் கருதப்பட்ட இவர் மீது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதான குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் 2021 மார்ச் 3ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார். இவரது கைதைக் கண்டித்து நாடெங்கிலும் கலவரங்கள் வெடித்தன. பொதுமக்கள் மத்தியில் நிலவிய அமைதியின்மையைத் தொடந்து மே மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார். 3 மாதங்கள் நிலவிய அமைதியின்மையின் போது 14 பேர் மரணத்தைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர்களைத் தவறாக வழிநடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2023 யூலை 28இல் இவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து யூலை 31இல் இவரது கட்சி கலைக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது. அதேநேரம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டதால் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் இழந்தார்.
இந்நிலையிலேயே கட்சியின் செயலாளராக விளங்கிய பாயே போட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். சங்கோ அளவுக்கு அறியப்பட்ட நபராக பாயே இருக்கவில்லை. ஆனால் ‘ஒஸ்மனேதான் டியோமாயே’ என்ற அறைகூவலை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். பெருவாரியாக பாயேவுக்கு வாக்களித்தார்கள். ஏப்ரல் 2இல் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பாயே, தனது அரசாங்கத்தின் தலைமை அமைச்சராக சங்கோவை நியமித்துக் கௌரவம் அளித்துள்ளார்.
ஆபிரிக்கக் கண்டத்தில் அண்மைக் காலமாக அடுத்தடுத்து படைத் துறை அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்றிய செய்திகள் கலக்கத்தைத் தோற்றுவித்திருந்த நிலையில் செனகலில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. அது மாத்திரமன்றி ஆபிரிக்காவில் அதி குறைந்த வயதில் ஜனநாயகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் தலைவராகவும் பாயே சாதனை படைத்துள்ளார். இவரது வெற்றி தொடர்பில் ஆபிரிக்கக் கண்டத்தின் பல்வேறு தலைவர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். முன்னாள் குடியேற்ற நாடான பிரான்சின் அதிபர் இம்மானுவல் மக்ரோன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நட்புறவை மேலும் வளர்த்துக் கொள்ள ஆசைப்படுவதாகத் தெரிவித்து உள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றாலும், பல சாதனைகளைப் படைத்தாலும் பாயேயின் ஆட்சிக் காலம் இலகுவானதாக இருக்கப் போவதில்லை என்பதே உண்மை. அவரின் தற்போதைய வெற்றி உள்நாட்டில் உள்ள பண முதலைகளுக்கு எதிராகப் பெறப்பட்ட வெற்றி. நடப்பு ஆண்டில் பெற்றோலிய உற்பத்தியைத் தொடங்க எதிர்பார்த்து உள்ள செனகலில், ஏற்கனவே சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் பாயேயும் சங்கோவும். இந்நிலையில் அந்தத் தரப்பில் இருந்து வெளிவரப் போகும் எதிர்ப்புகளையும் சமாளித்தாக வேண்டிய நிலையிலேயே இருவரும் உள்ளனர். போதாதற்கு தனது முன்னாள் குடியேற்ற நாடுகளில் நவீன காலனித்துவப் போக்கைக் கடைப்பிடித்துவரும் பிரான்சின் தலையீடுகளையும் கடந்து நாட்டை சுபீட்சமான பாதையில் நடைபோட வைக்க இருவராலும் முடியுமா? இதுவே மிகப் பெறுமதியான கேள்வி. இதற்கான விடை அடுத்து வரும் ஆண்டுகளில் தெரிய வரலாம்.
நன்றி வீரகேசரி