வளர்ச்சி நோக்கி விரையும் உள்ளம்..!

வீழ்ச்சி கண்டு வீழாதே!

வீழ்ச்சி கண்டு
வீழ்தல் மடமை!
விரைந்து நின்று
வளர்தல் பெருமை!
தாழ்ச்சி தீண்ட
துவள்தல் சிறுமை!
தன்னுள் ஆக்கம்
தழைத்தல் கடமை!

புகழ்ச்சி சூழ்ந்தால்
படைப்பு குன்றும்!
பகைமை தோன்றி
பள்ளம் தோண்டும்!
மகிழ்ச்சி கொள்தல்
மிதமாய் வேண்டும்!
மிதப்பில் இருத்தல்
மந்த காண்டம்!

இகழ்ச்சி செய்யும்
ஈனர் நெஞ்சம்
இழிந்த தன்மை
இறைத்த மஞ்சம்!
நகரும் வாழ்வில்
நல்லோர் கொஞ்சம்!
நலிந்தோர் மீட்கும்
நடப்பு பஞ்சம்!

வளர்ச்சி நோக்கி
விரையும் உள்ளம்!
வலிமை விளைந்து
வெற்றி கொள்ளும்!
தளர்ச்சி நீங்கி
தடத்தில் செல்லும்
தூண்போல் திகழும்
திடம்தான் வெல்லும்!

*~கவிவேந்தர் *சோமதேவன்* சோமசன்மா ஜொகூர்,மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *