அரசியல் தீர்வு மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் : சாணக்கியன் எம்.பி
நிரந்தர அரசியல் தீர்வின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும் தம்மை தாமே ஆளும் அரசியல் தீர்வும் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பின் மூலமான தீர்வே அவசியம் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 58 சதவீத நிதி தான் நடைமுறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.
தேசிய மக்கள் சக்திக்கு வட மாகாண மக்கள் பெருமளவில் வாக்களித்தனர். ஆனால் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் 6 சதவீதமான நிதிதான் வடமாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வரவு செலவுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.ஒதுக்கீடுகள் வரவு செலவுத் திட்ட பதிவுகளில் காணப்பட்டாலும் நடைமுறையில் எதுவும் நடக்காது.
வடக்கு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்கள்.காணாமல் போனோரின் உறவுகள் 2900 நாட்களை கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்விடயத்துக்கு ஒரு முன்மொழிவைக் கூட இதுவரையில் முன்வைக்கவில்லை.
நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என நீதியமைச்சர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு இருந்தால் அந்தப் பட்டியலைத் தருமாறு என்னிடம் கேட்கின்றார்.
வடக்கில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் பொறிமுறை வகுக்கப்படவில்லை. அபிவிருத்திகளை முன்னெடுப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என கருத வேண்டாம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி அபிவிருத்திகளை செய்தார். ஆனால் அவரால் கூட பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லை.
நிலையான அரசியல் தீர்வு ஊடாக மாத்திரமே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.