அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதி மீறல்கள் – பட்டியலிட்ட சுமந்திரன்.!

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பின்னர் மீறப்பட்ட வாக்குறுதிகளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் பட்டியலிட்டுள்ளார்.

யாழில் நேற்று (4) நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால ஆட்சிக்கு இதுவரையிலான ஆறுமாதகால நடவடிக்கைகள் முன்னுதாரணம் என குற்றம் சாட்டினார்.

மேலும் தெரிவித்த அவர், “தேசிய மக்கள் சக்திக்கு கடந்த தேர்தலில் கிடைத்த அமோக வெற்றிகள் ஊடாக உண்மையாகவே மக்களுக்கு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறதா? இல்லையா? என்று சில மாதங்களிலேயே புரிகிறது. அதன்படி சர்வதேச நாணய நித்தியத்தோடு எந்தவித தொடர்பும் இருக்கக்கூடாது என்று கொள்கையளவிலே உறுதியாக இருந்தவர்கள் பதவிக்கு வந்த பின்னர் சர்வதேச நாணய நித்யத்துடன் அவர்களது வாழ்க்கையை தொடர்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு சொன்னது போன்ற சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களில் எவ்வித மாற்றங்களையும் அவர்கள் கோரவில்லை.

ஊழியர்களுடைய சேமலாபா நிதியை மட்டுமே பயன்படுத்தி உள்ளூர் நிதி மறுசீரமைப்பு மேற்கொண்டதற்கு எதிராக குரல்கொடுத்தவர்கள், எவ்வித மாற்றமும் இன்றி அதே முறைமையின் மீது ஏறி நின்று ஆட்சி செய்கின்றனர்.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்குவோம் என்று எழுத்திலே உறுதியளித்தவர்கள். பிரதியீடுகளற்ற முழுமையான சட்ட நீக்கத்திற்காக குரல் கொடுத்தவர்கள், இப்பொழுது இன்னுமொரு சட்டத்தை இயற்றுவதாக சொல்கிறார்கள்.

நிலமெல்லாம் விடுவிக்கப்படும் என உறுதியளித்தார்கள். இன்றுவரை ஒரு அங்குலம் கூட விடுவிக்கப்படவில்லை. அரசியல் கைதிகள் எவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகத்துக்கு இந்த வரவுசெலவுத் திட்டத்தில் எதுவித நிதி ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை.

இவர்களது ஆட்சியின் ஆறு மாத காலம் என்பது மிக நீண்ட காலம். இந்த ஆறுமாத காலம்தான் இவர்களது ஆட்சியிலான ஐந்து வருடங்களும் எப்படி அமையப்போகிறது என்பதற்கு முன்னுதாரணம் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *