அரையாண்டு தாமதத்தின் பின்னர் ஆபிரிக்க வர்த்தக ஒன்றியம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கிறது.
2020 ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த ஆபிரிக்க நாடுகளின் வர்த்தக ஒன்றியம் [AfCFTA ] ஜனவரி 1 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆரம்ப நாள் என்பது உண்மையில் ஒரு அடையாளத் தினமென்றும் ஒன்றியத்தின் முழு உருவமும் திரளப் பல வருடங்களாகுமென்றும் குறிப்பிடப்படுகிறது.
திட்டமிட்டபடி ஜூலையில் ஆரம்பிக்க முடியாமலிருந்த காரணியான கொரோனாத் தொற்றுக்களின் விளைவுகள் ஆபிர்க்க நாடுகளிடையே ஒற்றுமை தேவையென்பதை மேலும் வலுவுறுத்தியிருக்கிறதாகத் தெரிகிறது. இவ்வர்த்தக வலயத்துக்குள்ளிருக்கும் நாடுகள் தம்மிடையே எல்லைகளை இல்லாதொழித்து ஏற்றுமதி – இறக்குமதிகளுக்கான வரிகளையும் ஒழுத்துக்கட்டுவதே நோக்கமாகும். ஆனாலும், ஆபிரிக்க நாடுகளிடையேயும், நாடுகளுக்கிடையேயும் நடந்துவரும் போர்களாலும், எல்லைகளில் காணக்கூடியதாக இருக்கும் கெடுபிடிகள், லஞ்ச ஊழல்களாலும் உடனடியாகப் பெரும் மாற்றங்களை எதிர்பார்ப்பவர்கள் ஏமாந்து போவார்கள் என்றே இதன் ஆதரவாளர்களும் தெரிவிக்கிறார்கள்.
தற்போதைய நிலையில் எரித்திரியா மட்டுமே விலகி நிற்கும் இந்த வர்த்தகக் கூட்டணிக்குள் 1.3 பில்லியன் மக்களும் 3.4 திரில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருளாதாரமும் இருக்கிறது.
ஆபிரிக்க வர்த்தக அமைப்பின் [AfCFTA] 54 நாடுகளில் 41 நாடுகள் ஏற்கனவே வரும் ஐந்து வருடங்களில் தாம் எப்படியான நேரத்தவணையில் தம்மிடையேயான 90 விகிதமான ஏற்றுமதி இறக்குமதி வரிகளை ஒழித்துக்கட்டுவதென்ற திட்டத்தைச் சமர்ப்பித்திருக்கிறார்கள். இந்த வர்த்தக் வலயத்தின் விளைவாக பத்து மில்லியனுக்கும் அதிகமான ஆபிரிக்கர்களுக்கு 2030 ம் ஆண்டுக்குள் வேலைவாய்ப்புக்களை உண்டாக்க முடியும் என்று உலக வங்கி கணித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்