இந்தியாவின் கொவிட் 19 மருந்துகளின் அனுமதிக்குப் பின்னணி பற்றி அரசியல் குடுமிப்பிடி ஆரம்பித்திருக்கிறது.
வெள்ளிக்கிழமையன்று மாலை இந்தியாவில் மருந்துகள் பாவிக்கப்படும் அனுமதியைக் கொடுக்கும் திணைக்களம் இரண்டு தடுப்பு மருந்துகளை நாட்டினுள் பாவிக்க அவசரகால அனுமதி கொடுத்தது தெரிந்ததே.
இவைகளில் ஒன்று செரும் இன்ஸ்டிடியூட்டின் கொவிஷீல்ட் மற்றது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக்கின் உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியான கொவக்ஸீன் ஆகும். இவைகளிரண்டும் “அவசரகாலத் தேவைக்காகப் பாவிக்கப்படலாம்,” என்ற ஒப்புதலுடன் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டன.
கொவிஷீல்ட், அஸ்ரா ஸெனகா நிறுவனம், ஒக்ஸ்வோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றினால் ஆராயப்பட்டவை. அந்தத் தடுப்பு மருந்து ஏற்கனவே பிரிட்டனிலும், ஆர்ஜென்ரீனாவிலும் இதே போன்று “அவசரகாலத் தேவைக்காகப் பாவிக்கப்படலாம்,” என்ற ஒப்புதலுடன் பாவனைக்கு அனுமதிக்கப்பட்டது. இந்தியாவில் தொடர்ந்தும் மனிதர் மீதான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது.
கொவக்ஸீன் இதுவரை இந்தியாவுக்குள் மனிதர் மீதான ஆராய்ச்சி நிலையிலேயே இருந்து வந்தது, ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இதன் விபரங்கள் பெரும்பாலும் வேறெவராலும் ஆராயப்படவில்லை. இந்தியாவிலும் கூட இதன் ஆராய்ச்சி விபரங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
இப்படியான நிலையில் கொவக்ஸினை “பரவிவரும் திரிபடைந்த கொரோனாக் கிருமிப்பரவலுக்கு எதிராகவும் செயற்படும்,” என்று குறிப்பிட்டிருக்கிறது மருந்துகளை அனுமதிக்கும் திணைக்களம். இதுவரை ஆராய்ச்சி முடிவடையாத நிலையில், வேறு திரிபடைந்த கிருமித்தாக்குதல் மீதான ஆராய்ச்சி நடக்காத நிலையில் அதை எப்படிச் சொல்லலாம் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. சில இந்திய விஞ்ஞானிகள் இதைச் சுட்டிக்காட்டி இப்படியாகக் குறிப்பிடுவதன் மூலம் மருந்துகளுக்கான ஆராய்ச்சிமுறையின் வழிமுறையை இது அவமதிக்கிறது, என்றும் இதனால் இம்மருந்து மீது மக்களுக்கு அவநம்பிக்கையே எழுகிறது என்றும் விமர்சிக்கிறார்கள்.
இதை காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் சுட்டிக்காட்டி பிரதமர் மோடி நாடு முழுவதும் அவசரமாகத் தடுப்பு மருந்து எதையாவது கொடுக்கும் அரசியல் ஆதாயத்துக்காக இதை இயக்குகிறார் என்று விமர்சிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்