ஆப்பிழுத்த குரங்காகத் தவிக்கும் டொனால்ட் டிரம்ப்!
ஜனாதிபதித் தேர்தலில் தனது தோல்வியை ஏற்கத் தொடர்ந்தும் மறுத்துவரும் டிரம்ப் தான் ஆரம்பித்த “வாக்குச் சீட்டுக்களைத் தவறாக எண்ணியிருக்கிறார்கள், திட்டமிட்டே போலி வாக்குகள் போடப்பட்டன” போன்ற குற்றச்சாட்டுக்களை கீறல் விழுந்த இசைத்தட்டுப்போலச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.
ஜனாதிபதிக் கதிரையில் தான் இருக்கப்போகும் நாட்களின் எண்ணிக்கை குறைந்துவருவதைக் கவனித்துப் பொறுமையின்றித் தன்னைச் சுற்றியிருந்தவர்கள் பலரைச் சாடிக்கொண்டும், நீதிமன்றங்களில் ஏகப்பட்ட வழக்குகளை மில்லியன்கள் செலவில் போட்டுக்கொண்டும் இருந்த டிரம்ப் கடைசி அஸ்திரமாகத் தனது உப ஜனாதிபதி வரப்போகும் ஜனாதிபதியை செனட் சபையில் பிரேரிப்பதைத் தடுப்பதில் ஈடுபட்டு வருகிறார்.
இன்னொரு பக்கத்தில் டிரம்ப் தான் தோற்றுப்போன ஜோர்ஜியா மாநிலத்தின் வாக்குகளை எண்ணும் திணைக்களத்தின் உயரதிகாரியான பிராட் ரப்பன்பெர்கரைத் தொலைபேசியில் அழைத்து ஒரு மணித்தியாலமாகத் தொந்தரவு கொடுத்திருக்கிறார். குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பில் “எனக்கு எப்படியாவது 11,780 வாக்குகள் வேண்டும்,” என்று குறிப்பிட்டுத் தான் அந்த மாநிலத்தில் தோற்றுப்போன அந்த இலக்கத்தளவு பொய் வாக்குகளைக் கண்டுபிடிக்கும்படி தொல்லைகொடுத்திருக்கிறார். குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஜோர்ஜியா மாநிலத்தின் ஏற்கனவே டிரம்ப், மற்றும் அவரது கட்சிக்காரர்களின் நீதிமன்ற வழக்குகளினால் மூன்று தடவைகள் மீள எண்ணப்பட்டு விட்டன. அவைகளில் எவ்வித தவறுகளையும் கண்டுபிடிக்க இயலவில்லை.
அதே ஜோர்ஜியா மாநிலத்தில் செனட்சபைக்கான இரண்டு தேர்தல்கள் ஜனவரி 5ம் திகதி நடக்கவிருக்கிறது. டிரம்ப்பின் ரிபப்ளிகன் கட்சியினரிடமிருக்கும் அவ்விரண்டு இடங்கள் தான் அக்கட்சியின் செனட் சபை பெரும்படியான இடங்கள். அவற்றை வெற்றிகொண்டால் ஜோ பைடனின் கட்சியினர் செனட்டிலும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதால் அத்தேர்தல் மிகவும் முக்கியமானது.
ஒரு தேர்தல் அதிகாரியை ஜனாதிபதி தொடர்புகொண்டு தொல்லைகொடுப்பது அமெரிக்க அரசியல்வாதிகளிடையேயும், நாட்டிலும் பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. இப்படியான டிரம்ப்பின் செயல்கள் ஜோர்ஜியாவில் தம் கட்சி வெல்வதற்கு இடையூறாக இருக்கும் என்று அவரது கட்சியாளர்களே பயப்படுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்