டிரம்பை உடனே பதவியிலிருந்து அகற்றும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள் சக அமைச்சர்கள்.
புதனன்று டொனால்ட் டிரம்ப்பினால் உசுப்பேற்றப்பட்டு வாஷிங்டனில் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் கட்டுப்பாடின்றி நுழைந்து ஆர்ப்பாட்டம் செய்த கூட்டத்தை அகற்றி பொலீசாரும், அதிரடிப் படையினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.
பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நிலைமையைச் சீர்செய்த பொலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நகரெங்கும் ஊரடங்குச் சட்டம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.
“மிகப்பெரும் தேர்தல் வெற்றியொன்றைக் களவாடினால் இதைப்போன்றவைகள்தான் நடக்கும் என்பது எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும். தேசியப் போராளிகளே, அமைதியாக வீடு சென்று உறங்குங்கள்,” என்று டுவீட்டினார் டிரம்ப்.
தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்ட டிரம்ப் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் அவர்களின் ஆர்ப்பாட்டத்தின் பின்னால் டுவீட்டிய வரிகள் தமது கருத்து உரிமை வரம்புகளை மீறியதாகக் குறிப்பிட்டு டுவிட்டர் டிரம்ப்பின் கணக்கை 12 மணித்தியாலங்களுக்கு மூடிவிட்டது. ஜனாதிபதியின் கணக்கு முடக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும். பேஸ்புக்கும் டிரம்ப்பின் கணக்கை ஒரு நாள் மூடிவிட்டது. தொடர்ந்தும் டிரம்ப் தனது கருத்துரிமை எல்லைகளை மீறுவாரானால் நிரந்தரமாக அவரது கணக்கு மூடப்படும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தின் அதே சமயம் பாராளுமன்றத்தின் இன்னொரு பக்கத்தில் ஜோ பைடனை அரசை ஏற்க வருமாறு உப ஜனாதிபதி மைக் பென்ஸ் அழைக்கும் நிகழ்வுக்காக கூடியிருந்து, அங்கு ஏற்பட்ட களேபரத்தால் நிறுத்தப்பட்ட செனட் சபை மீண்டும் கூடியிருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும், ரிப்பப்ளிகன் கட்சியினருமான மிட் ரோம்னி உட்பட பல சம கட்சிக்காரகள் புதனன்று மாலை, இரவு சம்பவங்களுக்குக் காரணம் அவர்களை டிரம்ப் பகிரங்கமாக வன்முறைக்கு உசுப்பேத்திப் பாராளுமன்றத்துக்குப் போய் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி தூண்டியதே என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். உப ஜனாதிபதி மைக் பென்ஸ் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து அத்துமீறி நடந்து சேதங்களை விளைவித்தவர்களைக் கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறார்.
ஆஷ்லி பபிட் என்ற பாராளுமன்றக் கட்டடத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்ட பெண்ணைத் தவிர மேலும் மூன்று பேர் அங்கே நடந்த வன்முறைகளின் விளைவாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. டிரம்ப்பின் அமைச்சர்கள் மிச்சமிருக்கும் இரண்டு வாரங்களுக்கு டிரம்ப்பை ஜனாதிபதியாக ஆள விடாமலிருப்பதற்காக அவரைப் பதவி நீக்கம் செய்யும் வழிவகைகளைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்