பிரேசிலில் பரிசீலித்ததில் 78 விகித நம்பக்கூடிய விளைவைத் தரும் சீனத் தடுப்பு மருந்து
உலகில் மோசமாகக் கொரோனாத் தொற்றுக்களால் உயிர்களை இழந்த நாடான பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் மாநிலங்கள் தடுப்பு மருந்துகளை மக்கள் பெற்றுக்கொள்ளவேண்டியது கட்டாயம் என்ற சட்டத்தைக் கொண்டுவரலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டிருக்கிறது. நாட்டின் ஜனாதிபதியோ “நான் தடுப்பு மருந்து போடப்போவதில்லை,” என்று பகிரங்கமாகக் கூறிவருகிறார்.
சுமார் 13,000 மனிதர்களிடையே பிரேசில் சீனாவின் கொவிட் 19 தடுப்பு மருந்தைப் பரிசீலித்துப் பார்த்ததில் அது 78 விகிதம் நம்பக்கூடிய விளைவைத் தருகிறது, என்று அதைப் பெற்றுக்கொண்டவர்கள் எவருக்கும் அதிக பக்க விளைவுகள் வரவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதே மருந்தைப் பாவிக்கத் திட்டமிட்டிருக்கும் துருக்கி தனது நாட்டில் நடாத்திய பரிசீலனைகளில் அது 91 விகிதம் நம்பத்தகுந்தது என்று குறிப்பிடுகிறது.
பிரேசிலில் கொரோனாத்தொற்றுக்கள், தடுப்பு மருந்து ஆகியவை மிகப்பெரும் அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கின்றன. அந்த வியாதி ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையில்லை என்று ஆரம்பம் முதலே சொல்லிவரும் ஜனாதிபதி பொல்ஸனாரோவும் வியாதியிலிருந்து நாட்டை விடுவிக்கவேண்டுமென்று குறிப்பிடும் ஸாவோ பவ்லோ நகரின் ஆளுனர் ஷாவோ டோரியாவும் விரைவில் வரவிருக்கும் தேர்தலில் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடவிருக்கிறார்கள்.
சீனத் தடுப்பு மருந்தின் ஆராய்ச்சி முடிவைக் குறிப்பிட்டு “இது முக்கியமான ஒரு சரித்திர நிகழ்ச்சி,” என்று சிலாகித்தார். வரவிருக்கும் 25 ம் திகதி தனது நகரில் தடுப்பு மருந்து கொடுக்க ஆரம்பிக்கவிருப்பதாகத் தெரிவித்தார். பிரேசில் நாட்டின் மருந்துகளைப் பாவனைக்கு அனுமதிக்கும் திணைக்களம் 08 ம் திகதி வெள்ளியன்று இந்த மருந்துப் பாவனைக்கான அனுமதியைக் கொடுக்கப்போவதாகத் தெரிவிக்கிறது.
சீனாவின் தடுப்பு மருந்துகள் ஆர்ஜென்ரீனா, சிலே நாடுகளிலும் பரிசோதனைக்கு உள்ளாகிறது. அந்த நிறுவனமோ [Sinovac] தனது சொந்தப் பரிசீலனை விபரங்களை எவரிடமும் கொடுக்காததையிட்டுப் பெரும் விமர்சனம் எழுந்திருக்கிறது.
அதேசமயம் சீனாவின் தடுப்பு மருந்து வறிய மற்றும் வளரும் நாடுகளால் விரும்பப்படுகிறது. முக்கிய காரணங்களில் ஒன்றாக மற்றைய தடுப்பு மருந்துகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் மருந்து அதிக குளிர் நிலையில் பேணப்படவேண்டியதில்லை. அதனால் அது பெரிதும் போக்குவரத்துகள், பேணும் வசதிகளில்ல்லாத நாடுகளுக்கு வசதியானதாகவும் இருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்