பாலியில் உலகின் மிக அழகிய கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்.
இந்தோனேசியாவின் ஒரு பகுதியான பாலி தீவின் வெள்ளை மணலால் நிறைந்த அழகிய கடற்கரைகள் உலகமெங்கும் பிரசித்தி பெற்றவை. அந்தக் கடற்கரைகளையெல்லாம் சமீப நாட்களில் கடலிலிருந்து வரும் பிளாஸ்டிக் குப்பைகள் மூடிக்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
அந்தக் கடற்கரைகளில் தினமும் 30 – 60 தொன் பாவிக்கப்பட்ட பிளாஸ்டிக்குகளாலான குப்பைகள் கடலின் அலைகளால் ஒதுக்கப்பட்டுக் குவிக்கப்படுகிறது. டிசம்பர் – பெப்ரவரி மாதங்களில் பருவமழை பெய்யும் இந்தத் தீவுகளில் அச்சமயத்தில் குப்பைகள் ஒதுங்குவதும் வருடாவருடம் சாதாரணமாகிவிட்டது. ஒதுங்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவும் வருடத்துக்கு வருடம் அதிகரித்து வருகிறது.
இதற்குக் காரணம் இந்தோனேசியாவில் குப்பைகளைக் கையாளும் ஒழுங்கு முறை படு மோசமாக இருப்பதுதான் என்று குறிப்பிடப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான குப்பைகள் கடலில்தான் கொட்டப்படுகிறது. கடலுக்குள் கொட்டப்படும் குப்பைகள் காற்றடிக்கும் திசைக்கேற்ப வெவ்வேறு கரைகளில் ஒதுங்கிவருகிறது.
கடலுக்குள் குப்பைகளைக் கொட்டும் நாடுகளில் உலகில் மோசமான நாடுகளாக இருப்பவைகளில் இந்தோனேசியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. முதலாவது இடம் சீனாவுக்கு.
பாலியின் கடற்கரைகளில் ஒதுங்கும் இந்தப் பிளாஸ்டிக் குப்பைகளை அள்ளுவதில் சுமார் 1,000 பேர்கள் ஈடுபட்டிருப்பதாக அப்பகுதி நகரசபையினர் தெரிவிக்கின்றனர். தினசரி நூற்றுக்கும் மேலான பாரவண்டிகளில் 200 தொன்னுக்கும் அதிகமான குப்பையை அங்கிருந்து அகற்றிவருவதாகவும், ஆனாலும், தங்களால் செய்து முடிக்க இயலாத அளவுக்குக் குப்பைகள் குவிந்துகொண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அக்குப்பைகள் இந்தோனேசியாவின் மிக அதிக மக்கள் வசிக்கும் ஜாவா தீவுப்பகுதியிலிருந்து கடலலைகளால் ஒதுக்கப்படுகிறது.
கொரோனாத் தொற்றுக்களால் சுற்றுலாப் பயணிகள் வழக்கத்தை விடக் குறைவாக வரும் இச்சமயத்தில் குப்பைகளை ஒதுக்குதல் மேலும் அலட்சியமாகச் செய்யப்படுவதாகவும் அந்த நகரப்பகுதிகளில் பேசப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்