பள்ளிகள் தொடர்ந்தும் இயங்கும், கன்ரீன்களில் புதிய கட்டுப்பாடுகள்!
மாணவர் சமுதாயத்துக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் இழப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதால் பாடசாலைகளை மூடுகின்ற முடிவை அரசு இப்போதைக்கு எடுக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வைரஸ் ஆபத்து உள்ள போதிலும் பாடசாலைகளைத் தீவிர கண்காணிப்புடன் தொடர்ந்து இயக்குவது என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தலைமையில் இன்று நடந்த செய்தியாளர் மாநாட்டில் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்தார்.சுகாதாரம், உளவியல், கல்வி போன்ற மூன்று முக்கிய காரணங்களுக்காக பாடசாலைச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் நெருக்கமாக ஒன்று கலக்கும் சந்தர்ப்பங்களை மேலும் தவிர்ப்பதற்குரிய ஒழுங்குகள் செய்யப்படும்.அங்கு கண்காணிப்புகள் தீவிரமாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
பாடசாலைக் கன்ரீன்களில் மாஸ்க் அணியாமல் நெருக்கமாக அமர்ந்து உணவருந்துகின்ற சந்தர்ப்பம் தொற்றுக்கு மிக அதிக வாய்ப்பாக இருப்பது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.இதனால் உணவு இடைவேளை நேரத்தை அதிகரித்து மாணவர்களை பல கட்டங்களாக உணவருந்த அனுமதிப்பது போன்ற நடைமுறைகள் கன்ரீன்களில் கடைப்பிடிக்கப்படவுள்ளன.
மாணவர்கள் பொதிகளில் உணவை எடுத்துச் சென்று உண்பது உட்பட வேறு மாற்று நடைமுறைகளும் பரிசீலிக்கப் படலாம் என்ற தகவலையும் கல்வி அமைச்சர் வெளியிட்டார்.பாடசாலைகளில் உள்ளக விளையாட்டுப் பயிற்சிகள் சில வாரங்களுக்கு நிறுத்தப்படுகின்றன.
வாராந்தம் மூன்று லட்சம் என்ற எண்ணிக்கையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வைரஸ் பரிசோதனை செய்யும் துரித திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.மாற்றமடைந்து வேகமாகப் பரவிவருகின்ற வைரஸ் இருபது வயதுக்கு குறைந்தவர்களையும் பீடித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனினும் பள்ளிகளை மூடவேண்டிய அளவுக்குத்ற தொற்று நிலைவரம் இல்லை என்று அரசுக்கு ஆலோசனை வழங்கும் அறிவியல் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.-
-குமாரதாஸன். பாரிஸ்.