பிரான்ஸின் வரலாற்று நாயகர்கள் வரிசையில் முதல் கறுப்பின பெண்.

பாரிஸ் பந்தியோன் கல்லறையில்அவரது நினைவுப் பேழை புதைப்பு!

அமெரிக்காவில் பிறந்த கறுப்பினக் கலைஞரும் சிவில் உரிமைச் செயற்பாட்டாளருமான ஜோசபின் பேக்கர் (Josephine Baker)-அவர் இறந்து சுமார் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் – பிரான்ஸில் மதிப்புக்குரிய வரலாற்று நாயகர்களின் வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்காவிலும் பிரான்ஸிலும் அவர்வாழ்ந்த நான்கு இடங்களில் சேகரிக்கப்பட்ட பிடியளவு மண் அடங்கிய பிரேதப்பெட்டி ஒன்று பாரிஸில் மதிப்புமிக்க வரலாற்றுப் பிரமுகர்கள் பலரது கல்லறைகள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் பந்தியோன் கோவிலில் (Panthéon mausoleum) புதைக்கப்பட்டது.

1906 ஆம் ஆண்டு அமெரிக்காவில்பிறந்த ஜோசபின் பேக்கர் நாஸிகளுக்கு எதிரான யுத்தத்தில் பிரெஞ்சு எதிர்ப்புப் படைப்பிரிவில் இரண்டாம் லெப்டினன்ட்என்ற பதவித் தர நிலையில் இருந்தவர். அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரேயொரு பெண் வீராங்கனையாகவும் திகழ்ந்தவர்.

அதே சமயம் தன் வாழ் நாள் பூராகவும் பெண்ணியம், இனவெறி எதிர்ப்பு, விடுதலை போன்றவற்றின் ஓர் அடையாளச் சின்னமாகத் திகழ்ந்தவர்.கறுப்பினப் பாகுபாட்டில் இருந்து தப்புவதற்காக 1925 ஆம் ஆண்டில் அமெரிக்காவை விட்டு வெளியேறி பிரான்ஸுக்கு வந்தஅவர், ஒரு பொழுதுபோக்குக் கலைஞராகவும், அதேசமயம் அரசியல் போராளியாகவும் மாறிப் பிரெஞ்சு மக்களைக் கவர்ந்தார். 1975 இல் உயிரிழந்த அவரதுஉடல் மொனாக்கோவில்(Monaco) புதைக்கப்பட்டது.

பாடகர், நடிகர், நடனக்கலைஞர் எனப் பல்துறைக் கலைகளில் உலகெங்கும் அறியப்பட்டவரான ஜோசபின் பேக்கர் பாரிஸ் பந்தியோனில் இடம்பெறுகின்ற ஆறாவது பெண் ஆவார். அதேவேளைபிரான்ஸின் மதிப்பு மிக்க வரலாற்றுப் பிரமுகர்கள் வரிசையில் இடம் பெறுகின்ற முதலாவது கறுப்பினப் பெண்என்ற பெருமையும் அவருக்குக் கிடைக்கிறது.

பிரான்ஸின் வரலாற்றுப் பிரபலங்களாகிய விக்டர் ஹியுகோ (Victor Hugo) எமில் சோலா (Emile Zola) மேரி கியூரி (Marie Curie) போன்றோரின் நினைவிடங்களுக்கு அருகே இடம்பிடித்த முதலாவது பொழுது போக்குக் கலைஞர்(entertainer) என்ற மதிப்பையும் பேக்கர் பெறுகிறார்.

ஜோசபின் பேக்கரை பந்தியோனில் உள்வாங்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை அதிபர் மக்ரோன் அண்மையில் ஏற்றுக்கொண்டிருந்தார். “தனது முழு வாழ்வையும் சுதந்திரம், நீதிஎன்ற இரண்டு வேட்கைகளுக்காகவும் அர்ப்பணித்தவர்” என்பதை ஏற்றுக்கொண்டே அவருக்குப் பந்தியோனில் இடமளிக்கப்படுவதாக எலிஸே மாளிகை அண்மையில் தெரிவித்திருந்தது.

ஜோசபின் பேக்கருக்கு பந்தியோனில் மதிப்பளிக்கும் வைபவத்தில் அதிபர் மக்ரோன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் பேக்கர் பிறந்த இடமான சென்.லூயிஸ் (St. Louis) நகரம், அவர் மிகவும் நேசித்து வாழ்ந்த பாரிஸ் இல்லம், பிரான்ஸின் தென் மேற்குப் பகுதியில் அவர் வாழ்ந்த Château de Milan des மற்றும் அவரது உடல் புதைக்கப்பட்டிருக்கும் மொனாக்கோ (Monaco) ஆகிய நான்கு இடங்களில் சேகரிக்கப்பட்ட மண் அடங்கிய பேழையை வான் படைவீரர்கள் செங்கம்பளம் மீது சுமந்து பந்தியோன் கல்லறைக் கோவிலுக்குள் எடுத்து வந்தனர். இரண்டாம் உலகப்போரின் போது பிரான்ஸின் எதிர்ப்புப்படையில் (French Resistance) அவர் ஆற்றிய பங்குக்காக இந்த இராணுவ மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.

பிரான்ஸின் வரலாற்றில் இடம்பிடித்த அரசியல், அறிவியல், கலைத் துறைகள் சார்ந்த உன்னத மனிதர்கள் சுமார் எண்பது பேரின் கல்லறைகளைத் தாங்கிய பந்தியோன் கோவில் பாரிஸ் நகரின் மையத்தில் லத்தீன் வட்டகையில் அமைந்துள்ளது.

ஜோசபின் பேக்கர் நினைவாக பாரிஸில்நிலக் கீழ் தொடரூந்து நிலையங்களில்ஒன்றாகிய Gaîté (ligne 13) மெற்றோ நிலையத்தின் பெயர் இன்று முதல்”Gaîté-Joséphine Baker” என்று மாற்றப்பட்டிருக்கிறது.

குமாரதாஸன். பாரிஸ்.