தனது ஆறாவது ஜனாதிபதிக் காலத்தை வென்றதாக முசேவெனி அறிவிக்கிறார்!
உகண்டாவில் நடந்த தேர்தலின் முடிவுகளின்படி நாட்டின் ஜனாதிபதி மீண்டும் வெற்றிபெற்றிருப்பதாக நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. பதவியிலிருக்கும் முசேவெனி 58.6 விகித வாக்குகளையும் பொபி வைன் 34.8 விகித வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்படுகிறது.
அமெரிக்க, ஆபிரிக்க நாடுகளின் சர்வதேசத் தேர்தல்களை விசாரிக்கும் குழுவினர் உகண்டா தேர்தலில் பல தவறுகள் நடந்ததாகக் குறிப்பிடுகின்றன. தேர்தல் சமயத்திலும் அதன் பின்னரும் நாட்டின் தொலைத்தொடர்புகளையும், இணையத் தொடர்புகளையும் துண்டித்ததைச் சுட்டிக்காட்டி பிரிட்டன் “அப்படியான நடவடிக்கைகள் நடந்தவை, நடப்பவைகளை வெளியே தெரியாமல் செய்யும்,” என்று தேர்தலைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
பொபி வைன், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் முடிவுகள் வெறும் கண் துடைப்புகளே என்று குறிப்பிடுகிறார்கள். “நாட்டின் இராணுவமும், பொலீசும் சேர்ந்து தேர்தலைக் களவாடிவிட்டன. சர்வாதிகாரி முசெவேனியின் நடத்தைகளைப் பற்றிய இன்னொரு சான்று இது,” என்று பொபி வைன் குறிப்பிடுகிறார்.
தேர்தலையடுத்து பொபி வைன் வீடு முற்றுக்கையிடப்பட்டது பற்றி இராணுவ அதிகாரி “அதை அவருடைய பாதுகாப்புக்காகவே செய்தோம்,” என்கிறார். நாட்டின் தலைநகரம் கடுமையான பொலிஸ், இராணுவப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
“தேர்தலில் வெற்றிபெற்றுச் சுகபோகமான வாழ்க்கையை அனுபவிப்பது எனது நோக்கமல்ல. நான் ஒரு விவசாயி. எனது நீண்டகால அரசியல் தலைமையில் செய்யப்பட்டிருக்கும் நன்மைகளைக் கண்டே மக்கள் எனக்கு மீண்டும் ஆதரவளித்திருக்கிறார்கள்,” என்று முசெவெனி நன்றி தெரிவித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்