பிள்ளைப்பிறப்புக்கள் குறைவதால் விசனமடைந்து வருகிறது சீனா.
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வேகமாக வளர்ந்துவந்த மக்கள் தொகையுடன் மல்லுக்கட்டி வென்ற நாடு சீனா. தற்போது நிலைமை எதிர்மறையாகியிருக்கிறது. மக்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளுவது கணிசமாகக் குறைந்து வருகிறது. 2020 இல் அதற்கு முந்தைய ஆண்டைவிட 15 விகிதத்தால் பிள்ளைப்பேறுகள் குறைந்திருக்கின்றன.
குடும்பத்தை அமைப்பதற்கான செலவுகள் அதிகரித்திருத்தல், சமூகத்தின் பழக்கவழக்கங்கள் மாறிவருதல் போன்ற காரணங்களால் சீனர்களிடையே பிள்ளைப் பேறு வருடாவருடம் மென்மேலும் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 10.05 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்திருக்கின்றன.
1979 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற கட்டுப்பாடு 2016 இல் அகற்றப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பிறப்புக்கள் குறைந்தே வருகின்றன. வருடத்துக்குப் 10 மில்லியன் குழந்தைப் பிறப்புக்களுக்குக் குறையுமானால் நாடு விரைவில் பல முனைகளிலும் பிரச்சினைகளை எதிர்நோக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.
சீனாவின் குறைந்துவரும் சனத்தொகை பற்றிச் சமூகவலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது. அங்கே கல்விச் செலவு, வாழ்க்கைச் செலவுகள், சகலமும் அதிகரித்திருப்பது சுட்டிக் காட்டப்படுகிறது. சீனர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள், பெண்கள் இனப்பெருக்க இயந்திரங்களல்ல போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
கடந்த வருடங்கள் போலவே தொடர்ந்தும் சனத்தொகை குறையுமானால் சீனாவின் பொருளாதாரம், சுபீட்சம் போன்றவையும் குறையும். விரைவில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற ஸ்தானத்தை அமெரிக்காவிடமிருந்து பறித்தெடுக்க முடியாது. ஏற்கனவே நாட்டின் ஐந்திலொரு பகுதி சனத்தொகை 60 வயதைத் தாண்டியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளைப் போலவே சீனாவின் சனத்தொகையின் முதியோரின் பகுதியும் அதிகரிக்குமானால் அவர்களைப் பேணுவதற்கான செலவுகளும் அரசுக்கு அதிகரிக்கும். சீனாவின் அரசியல்வாதிகளுக்கு மேற்கண்ட நிலைமை பெரும் தலையிடியைக் கொடுத்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்