பால்டிக் கடல் பரப்பு, தேம்ஸ் நதியின் சில பகுதிகள் பற்பல வருடங்களுக்குப் பின்னர் உறைந்திருக்கின்றன.
சுமார் இருபது வருடங்களுக்குப் பின்னர் லண்டனின் தேம்ஸ் நதி ஆங்காங்கே உறைந்திருப்பது காணக்கூடியதாக இருக்கிறது. அதே போலவே பால்டிக் கடலின் வட பாகங்களும் சில வருடங்களுக்குப் பின்னர் முழுவதுமாக உறைந்திருக்கின்றன. சுவீடனின் கிழக்கிலும், மேற்கிலும் கடல் பகுதிகளும், டென்மார்க்கின் குளங்கள் சிலவும் கூட உறைந்து போயிருக்கின்றன.
கடைசியாக தேம்ஸ் நதி முழுவதுமாக உறைந்து போயிருந்தது 1963 ஜனவரி மாதத்திலாகும். கடுமையான குளிர் வட பிராந்தியத்திலிருந்து பரவுவதே லண்டன் பகுதிகளில் உறையும் காலநிலையைக் கொண்டுவரும். சமீப நாட்களில் லண்டன் இரவுகளில் உறையும் குளிரை அனுபவிப்பதாகவும் பிரிட்டனின் சில பகுதிகள் – 20 c அளவுக்கு உறையும் காலநிலையை அடைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.
சுவீடன் உறைபனிக்காலம் பொதுவாகக் குளிராக இருப்பினும் கடந்த சில வருடங்களாகவே பால்டிக் கடலிலும், மேற்குக் கரைப்பகுதிகளிலும் நீர்ப்பரப்பு உறைவது, நிலப்பரப்பில் நீண்ட காலத்துக்கு உறைபனி இருப்பதும் அரியதாகவே காணக்கூடியதாக இருந்தது. அதனால், பால்டிக் கடல் உறைந்துவிடும் பட்சத்தில் கப்பல்கள், படகுகள் மாட்டிக்கொண்டால் பனிப்பரப்பை உடைத்து உதவும் மீட்புக் கப்பல்கள் கடந்த வருடங்களில் எவ்வித வேலையுமின்றி நிறுத்தப்பட்டிருந்தன. இவ்வருடம் அந்த மீட்புக் கப்பல்களுக்கு மட்டுமன்றி, மேற்குப் பகுதி நகரங்களில் பனிப்பிராந்தியத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உதவும் மீட்புப் படையும் பலருக்கு உதவவேண்டிய நிலை உண்டாகியிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்