எதிர்பார்த்த பலன் கிடைக்காததால் ரீபொக்கை விற்கப்போவதாக அடிடாஸ் அறிவித்தது.
நைக்கி நிறுவனத்துடன் போட்டியிட்டுத் தமது விற்பனையை உயர்த்தும் திட்டத்துடன் 2006 இல் ரீபொக் நிறுவனத்தை வாங்கியது ஜெர்மனிய நிறுவனமான அடிடாஸ். ஆனாலும் ரீபொக் சின்னத்துப் பொருட்களின் விற்பனையால் அடிடாஸ் நிறுவனத்தால் எதிர்பார்த்த அளவு இலாபமடைய முடியவில்லை.
அடிடாஸ் நிறுவனம் தனது சின்னத்துடன் தயாரிக்கப்படும் விற்பனையைப் படிப்படியாக உயர்த்தினாலும் ரீபொக் விற்பனையில் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்காததால் அது அடிடாஸ் நிறுவனத்தின் மொத்த செயற்பாட்டுக்குப் பாரமாகவே இருந்து வருகிறது. எனவே, பங்குதாரர்கள், முதலீட்டாளர்களின் விருப்பப்படி ரீபொக் நிறுவனத்தை விற்பதற்கு முடிவு செய்திருக்கிறது அடிடாஸ்.
ரீபொக் நிறுவனத்தின் விற்பனை 2020 இன் ஆரம்பப் பகுதியிலிருந்து நடுப்பகுதிவரை 44 % விகிதத்தால் சரிந்து, வருடக் கடைசி மாதங்களில் மேலும் 7% விகிதத்தால் சரிந்தது. ஆயினும், 2019 இலிருந்து ரீபொக் தனது சின்னத்தின் தயாரிப்புக்களைப் பெண்களை நோக்கி குறிவைத்துக்கொண்டிருப்பது வெற்றியடைந்து வருவதாகவே கணிப்பாளர்கள் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்