“ரைம்ஸ்” சஞ்சிகையில் கனடா ஈழத்தமிழ் யுவதி!

கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட மைத்ரேயி ராமகிருஷ்ணனை பிரபல “ரைம்ஸ்” சஞ்சிகை அதன் அடுத்த நூறு (TIME100 Next) பிரபலங்களில் ஒருவராக மதிப்பிட்டிருக்கிறது. அரசியல், சுகாதாரம், பொழுதுபோக்கு, கலை, வர்த்தகம் போன்ற துறைகளில் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகின்ற முக்கிய நபர்களது பட்டியலிலேயே மைத்ரேயியின் பெயரும் இடம்பிடித்துள்ளது.

ரிக்ரொக், இன்ஸ்ரகிராம் போன்ற சமூகவலைத்தள வீடியோக்கள் ஊடாக உலகெங்கும் பதின்ம வயதினரிடையே புகழ் பெற்றிருந்த இளம் நடிகை மைத்திரேயி ராமகிருஷ்ணன் அண்மைக்காலமாகத் தொலைக்காட்சித் தொடர்கள் வாயிலாக அமெரிக்காவில் நன்கு அறியப்பட்டு வருகிறார். நெற்பிலிக்ஸில் (Netflix) ஒளிபரப்பாகி வரும் அமெரிக்காவின் பிரபல “Never Have I Ever” என்னும் பதின்மப் பருவ நகைச்சுவைத் தொலைக்காட்சி நாடகத் தொடரில் பிரதான பாத்திரத்தில் தோன்றியதன் மூலம் அவர் மேலும் பிரபலம் அடைந்துள்ளார்.

19 வயதான மைத்ரேயியை கடந்த ஆண்டில் நியூயோர்க் ரைம்ஸ் அதன் ஆண்டின் சிறந்த நடிகர்கள் பட்டியலில் (New York Times’ annual list of the year’s best actors) சேர்த்திருந்ததமை குறிப்பிடத் தக்கது.

மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர்கள் போர் காரணமாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவின் ஒன்ராறியோவில் வசித்துவருகின்றனர். தமிழர்கள் மீதான போரின் கொடுமைகள் காரணமாக மைத்ரேயி தன்னை ஓர் இலங்கையர் எனக் குறிப்பிடுவதைத் தவிர்த்து கனடிய தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றே அடையாளப்படுத்தி வருகிறார்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *