ரஷ்யாவில் பறவை காய்ச்சல் வைரஸ் முதல் முறையாக மனிதரில் தொற்று!
உலகை அச்சுறுத்தக் கூடிய அடுத்த வைரஸ் பெரும்பாலும் பறவைப் பண்ணைகளில் இருந்தே வெளிவரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் அதனை நிரூபிக்கின்ற செய்தி ஒன்று ரஷ்யாவில் வெளியாகி இருக்கிறது.
உலகின் பல பகுதிகளில் பறவைகளில் காணப்படுகின்ற AH5N8 எனப்படும் புதிய வைரஸ் முதல் முறையாக பறவைகளில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றி யுள்ளது என்ற தகவலை ரஷ்யா அறிவித் திருக்கிறது.
நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் இருந்தே ஏழு பேருக்குப் பறவைக்காய்ச்சல் வைரஸ் தொற்றி உள்ளது. அதனை அங்குள்ள நுகர்வோர் நலன் பேணும் சுகாதாரக் காப்பகத்தின் தலைமை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். AH5N8 எனப் பெயரிடப்பட்ட வைரஸின் முதலாவது மனிதத் தொற்றுக்கள் இவை என்பதால் அது குறித்து உலக சுகாதார நிறுவனத் துக்கு (WHO)அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே பறவைக் காய்ச்சல் பரவி இருந்த கோழிப் பண்ணை ஒன்றின் பணியாளர்கள் ஏழு பேரே தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த வைரஸ் மனிதர்களிடையே தொடர்ந்து பரவக் கூடிய ஆபத்து உள்ளதா என்பது இன்னமும் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை.
பறவைகளில் தொற்றி உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய வைரஸ் இனங்கள் காலப்போக்கில் வீரியம் பெற்று மனித குலத்தைத் தாக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பறவைகளையும் விலங்குகளையும் நெரிசலாக அடைத்துப் பராமரிக்கும் பண்ணைகளில் இருந்து அடுத்த கொரோனா வைரஸ் தோன்றக்கூடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
உலகில் இதற்கு முன்னர் பரவிய H5N1என்ற பறவைக் காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்குத் தொற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்ட AH5N8 வைரஸ் காரணமாக லட்சக் கணக்கான பறவைகள் கொன்றொழிக் கப்பட்டு வருகின்றன. கோழிகள், வாத்துகள் போன்றன இறைச்சிக்காக வளர்க்கப்படும் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தொற்றி உள்ளது.
—————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.