ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளின் அடுத்த மட்ட மோதல்களுக்கான பத்து இடங்கள் காலியாக இருக்கின்றன.
திங்களன்று நடந்த உதைபந்தாட்ட மோதல்களின் பின்பு ஆஸ்திரியா, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளும் ஐரோப்பியக் கோப்பைக்கான போட்டிகளில் அடுத்த கட்டத்துக்கு நகர்வது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பதினாறு இடங்களில் தொடர்ந்தும் பத்து இடங்கள் காலியாக இருக்கின்றன.
இன்று நடக்கவிருக்கும் இரண்டு மோதல்களிலொன்றில் இங்கிலாந்து, செக் குடியரசின் குழுவை எதிர்கொள்ளும். தலைக்கு 4 புள்ளிகளை எடுத்திருக்கும் இந்த அணிகளில் அதிக கோல்கள் போட்டதால் செக் குடியரசு முதலிடத்திலிருக்கிறது. மற்றைய மோதலில் உலகக் கோப்பையை வைத்திருக்கும் கிரவேஷியா, ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும். இவைகளிரண்டும் தலா ஒரு புள்ளியையே பெற்றிருக்கின்றன.
திங்களன்று நடந்த நாலு மோதல்களில் பெல்ஜியம் 2 – 0 இலக்கத்தில் பின்லாந்தைத் தோற்கடித்தது. நெதர்லாந்து மீண்டுமொருமுறை தனது தரமான விளையாட்டால் வட மக்கடோனியாவை 3 – 0 என்று தோற்கடித்தது. ஆஸ்திரியாவுக்கும், உக்ரேனுக்குமிடையே நடந்த மோதலில் வெல்பவர் நேரடியாக அடுத்த மட்டத்துக்குப் போகலாமென்ற நிலையில் நடந்த உக்கிரமான மோதலில் ஆஸ்திரியா ஒரு தடவை பந்தை எதிராளியின் வலைக்குள் அடித்து சரித்திரத்தில் முதல் தடவையாக ஒரு உதைபந்தாட்டப் போட்டியின் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
ஐரோப்பியக் கோப்பைப் பந்தயங்களில் பல தடவைகள் வெவ்வேறு மட்டத்தில் வென்றிருக்கும் டென்மார்க் 1992 இல் ஜேர்மனியைத் தோற்கடித்துக் கோப்பையைத் தன்னகப்படுத்தியது. நீண்டகால உதைபந்தாட்டப் பாரம்பரியமுள்ள நாடான டென்மார்க் இந்த முறை தனது முதலிரண்டு மோதல்களிலும் தோல்வியடைந்திருந்தது. எனவே அவர்களுடையே நேற்றைய மோதல் “இடத்தைக் காலி பண்ணுவதா, இல்லையா?” என்பதற்கானதாக இருந்தது.
டென்மார்க்குக்கு வாகாக அவர்கள் தமது தலைநகரான கொப்பன்ஹேகனில், ரஷ்யாவின் அணியை எதிர்கொண்டார்கள். ரஷ்யா ஏற்கனவே விளையாடிய இரண்டில் ஒன்றில் பெல்ஜியத்திடம் 0 – 2 என்று தோல்வியையும், பின்லாந்துடன் 1 – 0 என்று வெற்றியையும் பெற்றிருந்தனர். அவர்களைப் பொறுத்தவரைகூட நேற்றைய மோதல் தொடர்ந்தும் போட்டியிலிருப்பதா என்பதை நிர்ணயிப்பதாக இருந்தது.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த மோதலில் ரஷ்யாவின் வீரர்களைவிட டென்மார்க்கின் அணிக்குப் பலமான ரசிகர்கள் ஆதரவு இருந்தது. கொப்பன்ஹேகன் அரங்கம் நிறைந்து வழிந்தது. முதலாவது மோதலில் மாரடைப்பு வந்து விளையாடும்போது வீழ்ந்த கிரிஸ்டியன் எரிக்ஸன் குழுவினரிடையே மனத்தளர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததாகக் குறிப்பிடப்பட்டது.
எனவே, மோதலுக்கு முன்னரே “வென்றே தீருவோம்,” என்று கூறி அணியினர் தமது மக்களின் ஆதரவைக் கேட்டிருந்தனர். அதே போலவே அங்கே வந்திருந்தவர்கள் விளையாட்டுத் தொடங்கியது முதல் பெரும் குரலில் உற்சாகப் பாடல்கள் பாடிக்கொண்டிருக்க, டென்மார்க்கின் அணி பலவீனமான ரஷ்ய அணியின் பாதுகாப்பை நொறுக்கி நாலு தடவைகள் பந்தை வலைக்குள் வீழ்த்தியது. ரஷ்ய வீரர் ஸூபா ஒரேயொரு தடவை டென்மார்க்கின் வலைக்குள் பந்தை அடித்தார். அதன் மூலம் டென்மார்க் தனது அடுத்த மோதலுக்கான பாதையை அமைத்துக்கொண்டது. 26 ம் திகதியன்று வேல்ஸுடன் டென்மார்க் மோதும்.
சாள்ஸ் ஜெ. போமன்