நாட்டின் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசிகள் பெற்ற பின்னரும் ஏன் சில நாடுகளில் கொரோனாப் பரவல் அதிகமாக இருக்கிறது?
சீலே, ஷிசல்ஸ், பஹ்ரேய்ன், மங்கோலியா ஆகிய நாடுகளில் சமீப வாரத்தில் கொவிட் 19 தொற்றுக்கள் அதிகமாகியிருக்கின்றன. கொரோனாத்தொற்றுப் புள்ளிவிபரங்களின்படி மேற்கண்ட நான்கு நாடுகளும் உலகில் தொற்றுக்கள் மிக அதிகமான 10 நாடுகளின் பட்டியலில் இருக்கின்றன. நான்கு நாடுகளிலுமே 50 – 68 விகிதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எதனால் பெருமளவு குடிமக்களுக்குத் தடுப்பு மருந்துகள் கொடுத்த பின்னரும் சில நாடுகளில் தொற்றுக்கள் மிக அதிகமாகவே இருக்கின்றன என்பதற்கான விடையை மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. வேகமாகச் சமூகக் கட்டுப்பாடுகளை நீக்கியது, குறிப்பிட்ட திரிபுகளின் அதிவேகப் பரவல் போன்றவை காரணமாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
அதேசமயத்தில், குறிப்பிட்ட நாடுகளில் பாவிக்கப்பட்டது சீனாவின் சினோவாக், சினோபார்ம் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளே என்பது, சீனத் தடுப்பு மருந்துகளின் எதிர்ப்புப் பலத்தைப் பற்றிய கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.
மொடர்னா, பைசர் பயோன்டெக் தடுப்பு மருந்துகளைப் பாவித்த அமெரிக்காவில் தொற்றுப் பரவல் 94 விகிதத்தால் குறைந்திருக்கிறது.
ஷிசல்ஸ் உலகிலேயே பெரும்பாலானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் கொடுத்திருக்கும் நாடாகும். அங்கே தினசரி ஒரு மில்லியன் பேருக்கு 716 பேர் தொற்றுக்கு உள்ளாகிறார்கள். சினோபார்ம் தடுப்பு மருந்துகளே அங்கே பெரும்பாலாகக் கொடுக்கப்பட்டன.
ஷிசல்ஸுக்கு அடுத்ததாக தனது நாட்டவரில் பெரும்பான்மையானவர்களுக்குத் தடுப்பு மருந்துகளிரண்டையும் கொடுத்திருக்கிறது இஸ்ராயேல். பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தே அங்கே கொடுக்கப்பட்டது. தற்போதைய நிலைமையில் மில்லியன் பேருக்கு 5 பேருக்கும் குறைவானவர்களுக்கே தினசரி தொற்றுக்கள் காணப்படுகின்றன.
இவைகளைக் கவனிக்கும்போது உலகில் மூன்று விதமான கொரோனாத் தொற்றுப் பிரிவுகளைத் தடுப்பு மருந்துகளிலிருக்கும் வித்தியாசங்கள் ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்படுகிறது.
பைசர், மொடர்னா ஆகியவற்றின் தடுப்பு மருந்துகளைத் தமது பணபலத்தால் வாங்கித் தமது நாட்டவருக்குப் பலமான பாதுகாப்பைக் கொடுத்த நாடுகள் சில. தமது குடிமக்களுக்குத் தடுப்பு மருந்துகள் வாங்கப் பணபலம் இல்லாததால் பெரும்பான்மையானவர்கள் தடுப்பு மருந்துகளைப் பெறமுடியாத நாடுகள் இன்னொரு குழு. தமக்குக் கிடைத்த தடுப்பு மருந்துகளை, போதிய பலமில்லாவிட்டாலும் பாவித்து அரைகுறைப் பாதுகாப்பை மட்டுமே கொடுத்த நாடுகள் வேறொரு குழு.
தொற்றுக்கள் உலகெங்கும் பரவ ஆரம்பித்தவுடனேயே தனது தடுப்பு மருந்துகளைப் பெருமளவில் தயாரித்து அரசியல் பாலங்களாக 90 நாடுகளுக்கு இலவசமாகவும், விலைக்கும் கொடுத்தது சீனா. எனவே அவர்களுடைய தடுப்பு மருந்துகள் கொரோனாத் தொற்றுக்களுக்கெதிராக முழுப் பாதுகாப்புக் கொடுக்காமலிருக்குமானால், உலகின் பெரும்பாலான நாடுகள் அரைகுறையான பாதுகாப்பையே பெற்றிருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்