அமெரிக்கப் பாராளுமன்றக் கட்டடத்தில் புகுந்து அட்டூழியம் செய்தவர்கள் மீது வழக்குகள் தயாராகின்றன.
அத்துமீறிப் புகுந்தமை, ஆயுதங்களை அனுமதியின்றிப் பொது இடத்தில் வைத்திருந்த குற்றம், பாராளுமன்றச் சபாநாயகரை மிரட்டியது, பொதுச் சொத்துக்களை அழித்தல் போன்ற குற்றங்களுக்காக 25 பேர் அமெரிக்க நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார்கள்.
தனது ஆதரவாளர்களப் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து துவம்சம் செய்யத் தூண்டியதற்காக இன்று திங்களன்று டிரம்ப் மீது குற்றஞ்சாட்டி அவரைப் பதவியிலிருந்து அகற்ற டெமொகிரடிக் கட்சியினர் தீர்மானம் கொண்டுவரும் அதே சமயத்தில் பல படங்களிலும், தாம் செய்துகொண்டிருந்த குற்றங்களுக்காக அடையாளங் காணப்பட்டவர்களை உச்ச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்த அரச வழக்கறிஞர்கள் தயாராகிறார்கள்.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பற்றிப் பொதுமக்களிடமிருந்து 40,000 துப்புக்கள் வந்திருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது. அந்த 25 பேர் மீதும் உள் நாட்டுத் தீவிரவாத முயற்சிக்கான குற்றச்சாட்டும் வைக்கப்படவிருக்கிறது. பல நாஸிக் கோட்பாடுகளைக் கொண்டவர்களும் குற்றவாளிகளாக அடையாளங் காணப்பட்டிருக்கிறார்கள்.
பைடன் பதவியேற்கும் நாளில் மேலும் கலவரங்களும், தீவிரவாத நடவடிக்கைகளும் நடாத்தச் சில குழுக்கள் திட்டமிட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சுக்குத் துப்புக்கள் கிடைத்திருப்பதாகத் தெரியவருகிறது. எனவே பாதுகாப்பு அமைச்சரகம், பொலீஸ் ஆகியோர் பல திணைக்களங்களுடன் ஒன்றிணைந்து நிலைமையைக் கணித்துச் செயற்படும் திட்டங்களில் இணைந்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கத்தில் பாராளுமன்றப் பாதுகாப்புப் படையின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. முன்னர் குறிப்பிட்டது போலன்றி ஜனவரி 6 ம் திகதி டிரம்ப் தனது பேரணியைக் கூட்டிய சமயத்தில் கலவரங்கள் நடக்கலாம், பாராளுமன்றக் கட்டடத்துக்குள் அவர்கள் நுழைய முற்படலாம் போன்ற எச்சரிக்கைகளைப் பாராளுமன்றப் பாதுகாப்புப் படையினர் பெற்றதாகத் தெரியவருகிறது. அவர்களுக்கு உதவியாக வாஷிங்டன் அதிரடிப்படை அன்று அங்கே பாதுகாப்புக்கு வரத் தயாராக இருந்து அவர்களின் தலைமை அதை மறுத்திருக்கிறது. தனது செயலுக்குப் பொறுப்பேற்றுப் பாராளுமன்றப் பாதுகாப்புப்படைத் தலைவர் ஸ்டீபன் சுண்ட் பதவி விலகுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்