எட்டாவது தடவையாக ஆபிரிக்கக் கோப்பையை வெற்றிகொள்ளத் தயாராகியது எகிப்திய அணி.
வியாழனன்று கமரூனின் தலைநகரில் நடந்த இரண்டாவது அரையிறுதி மோதலில் பங்குபற்றிய கமரூன் அணியும், எகிப்திய அணியும் தாம் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்பதை 120 நிமிடங்கள் உதைத்து வெளிப்படுத்தின. எவரும் வெல்ல முடியாத நிலையில் முடிச்சுப்போட்டுவிட்ட மோதலின் இறுதியில் வலைகாப்பாளர்களின் தலைகளில் வெற்றியைத் தீர்மானிப்பவர் யாரென்ற பொறுப்பு வைக்கப்பட்டது.
கமரூன் வீரர்கள் எதிராளியின் வலைக்குள் குறிபார்த்துப் பந்தை உதைத்துத் தள்ள தங்களுக்குக் கிடைத்த முதல் மூன்று சந்தர்ப்பங்களில் இரண்டைக் கோட்டை விட்டார்கள். எகிப்திய அணியினரோ தமக்குக் கிடைத்ததை ஒழுங்காகப் பயன்படுத்தினார்கள். கமரூன் வீரர் Clinton N’Jie க்குக் கிடைத்தது அவர்களுக்கான நான்காவது சந்தர்ப்பம். அதை அவர் வலைக்குள் போடத் தவறியபோதே, எகிப்து அணி, தனது பத்தாவது தடவையாக ஆபிரிக்கக் கோப்பைக்கான இறுதி மோதலில் பங்குபற்றப்போகிறது என்பது வெளிச்சமாகிவிட்டது. எகிப்திய விசிறிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நட்சத்திரம் மூ சாலே பந்தைத் தொடவே தேவையின்றி அவர்களுடைய அணி 3 – 1 என்ற வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
எகிப்திய அணியின் பயிற்சிப் பொறுப்பாளர் கார்லோஸ் குவேய்ரோஸ் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நடுவரால் வெளியே அனுப்பப்பட்டார். அவர் நடுவரை உரத்த குரலில் கத்தி, விமர்சித்ததாலேயே அந்தத் தண்டனை கொடுக்கப்பட்டது. அவர் இறுதிப்போட்டியின்போது எகிப்திய அணியின் பக்கத்திலிருந்து உற்சாகப்படுத்த முடியாது.
ஆபிரிக்கக் கோப்பையை மிக அதிகமான தடவைகள் [7] வென்ற நாடு எகிப்து என்றால் இரண்டாவது இடத்திலிருக்கும் கமரும் அதை ஐந்து தடவைகள் வென்றிருக்கிறது. நேற்றைய மோதலிலும் தமது சொந்த நாட்டில் விசிறிகளால் உந்தப்பட்ட கமரூன் அணியினரின் விளையாட்டு எகிப்து அணியைத் திணறவைத்தது. ஆட்டத்தின் முடிவோ கமரூன் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாகியது.
மூன்றாவது இடத்துக்காகக் கமரூன் புர்க்கினோ பாசோவைச் சனியன்று எதிர்கொள்ளும். ஞாயிறன்று இறுதிப் போட்டியில் எகிப்து செனகல் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இதுவரை எப்போதுமே ஆபிரிக்கக் கோப்பையைக் கைப்பற்றாத செனகல் ஆகும். லிவர்பூல் அணியில் விளையாடும் நட்சத்திரத் தோழர்கள் மூ சாலேயும் சாடியோ மனேயும் அந்த மோதலில் கௌரவர் – பாண்டவராக மோதுவார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்