காகிதப் பற்றாக்குறை காரணமாக சிறீலங்காப் பாடசாலைகளின் பரீட்சைகள் ஒத்திவைக்கபட்டன.
சிறீலங்கா அரசின் டொலர் தட்டுப்பாடு நாட்டின் கல்வித்துறையையும் பாதித்திருக்கிறது. இறக்குமதி செய்ய டொலர் பலமில்லாததால் பரீட்சைகளுக்கான காகிதங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக நாட்டில் மில்லியன் கணக்கான மாணவர்களுக்கு நடக்கவிருந்த பரீட்சைகள் ஒத்திப்போடப்பட்டிருப்பதாகச் சிறீலங்கா அரசு அறிவித்திருக்கிறது.
நாட்டின் சுமார் 4.5 மில்லியன் பிள்ளைகளுக்கு நடக்கவிருந்த தவணைப் பரீட்சைகளே அவர்கள் அடுத்த வகுப்புகளுக்குத் தகுதியானவர்களா என்பதை நிர்ணயிக்கவிருந்தன. அந்தப் பரீட்சைகளே காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சிறீலங்காவின் சுமார் 6.9 பில்லியன் டொலர் கடன்களை இவ்வருடத்துக்குள் அடைக்கவேண்டும். ஆனால், அரசின் கையிருப்பில் பெப்ரவரி மாத இறுதியில் 2.3 பில்லியன் டொலர்களே உள்ளன. விளைவாக, வெளிநாடுகளிலிருந்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியாத நிலையில் நாடு சுதந்திரமடைந்த பின்னர் அதி மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது.
உணவுப்பொருட்கள், எரிசக்தி, மின்சாரம், மருந்துகள் எல்லாமே பெரும் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்றன. நாடெங்கும் மக்கள் தமக்கு அன்றாடம் தேவையான பொருட்களுக்காக வரிசைகளில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்