ஐரோப்பிய நாடுகளும் கட்டாய கொவிட் 19 தடுப்பூசித் திட்டங்களும்.
கொவிட் 19 பரவல் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அதிகளவில் தொடர்கின்றன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களிடையே மிகப் பெரும் பங்கினர் தடுப்பூசியைப் போட்டிருப்பினும் ஓமெக்ரோன் திரிபின் பரவல் படுவேகமாக இருக்கிறது. ஆனால், அவர்களுக்கான மருத்துவ தேவையும், அவர்களிடையே இறப்புக்களும் கடந்த வருடத்தை விட மிகக் குறைவாகவே இருக்கின்றன.
மருத்துவ சேவையானது முன்னைய பரவல் காலம் போன்று திக்குமுக்காடாமல் இருக்கவும், இறப்புக்கள் குறைவாக இருக்கவும் காரணம் பெரும்பாலானோர் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டிருப்பதே என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையே செய்யப்பட்ட ஆராய்ச்சியும் அதையே சுட்டிக் காட்டுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் சில தமது குடிமக்களெல்லாருக்கும் அல்லது ஒரு பகுதியினருக்கு கொவிட் 19 தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. குழந்தைகளுக்குத் தட்டம்மை போன்றவைக்குத் தடுப்பூசி போடுவது உலகின் பல நாடுகளிலும் கட்டாயமாக இருப்பினும் கொவிட் 19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது ஐரோப்பாவின் ஒரு பகுதியாரிடையே பெரும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. அதனால், வெவ்வேறு நாடுகள் தமது குடிமக்களுக்குக் கொவிட் 19 தடுப்பூசியைப் போடுவதற்கு வெவ்வேறு வழிவகைகளைக் கையாள்கின்றன.
கட்டாயத் தடுப்பூசிச் சட்டத்தை பெப்ரவரி 01 ம் திகதி முதல் தாட்டு மக்களுக்குக் கொண்டுவரவிருக்கிறது ஆஸ்திரியா. நாட்டின் பிரதமர் அலெக்சாண்டர் ஸ்கல்லன்போர்க் ஆஸ்திரியர்களில் சிறு பகுதியினரிடையே நிலவும் தடுப்பூசி எதிர்ப்பைச் சமாளிக்கவும், மீண்டும் மீண்டும் பரவிவரும் கொவிட் 19 ஐ எதிர்கொள்ளவும் வேறு வழியில்லை என்கிறார்.
ஜேர்மனியின் புதிய அரசு கடந்த வருட இறுதியில் பதவியேற்றது. அதேசமயம் நாட்டில் தொற்றுப்பரவல் பெருமளவில் இருந்தது. தடுப்பூசி எதிர்ப்பாளிகள் ஜேர்மனியில் சிறுபான்மையினராக இருப்பினும் தீவிரவாத நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்காமலிருப்பதாக புலனாய்வுத்துறை தெரிவிக்கிறது. பதவியேற்ற கூட்டரசு முன்னாள் பிரதமர் அஞ்செலா மெர்க்கல் தன் ஆட்சிக்காலத்தில் தடுப்பூசியைக் கட்டாயப்படுத்துவதை எதிர்த்தாலும், தற்போது அதற்கு ஆதரவளித்து வருகிறார். கட்டாயத் தடுப்பூசிச் சட்டம் பற்றி விரைவில் ஜேர்மனிய பாராளுமன்றம் முடிவெடுக்கும்.
இத்தாலில் கடந்த ஏப்ரலில் ஐரோப்பாவின் முதலாவது நாடாக மருத்துவ சேவையாளர்களுக்குக் கட்டாயமாக்கியது. டிசம்பர் 2022 இல் தொற்றுக்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்ததால் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில், வேலைத்தளங்களில் நடமாடுவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியிருக்கிறது. அதையடுத்து நாட்டின் 50 வயதுக்கு அதிகமானவர்கள் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டுமென்ற சட்டம் ஜனவரி 05 ம் திகதி முதல் அமுலாக்கப்பட்டிருக்கிறது.
பிரான்ஸின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஒலிவியர் வரான் தாம் நாட்டு மக்கள் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கப் போவதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். மருத்துவ சேவை, மீட்புச் சேவை மற்றும் மக்களுடன் நெருங்கிச் சேவையாற்றும் சில துறையினருக்குத் தடுப்பூசி போடுதல் கட்டாயம் என்று பிரான்ஸ் சட்டமியற்றியிருக்கிறது. உணவகங்கள், தவறணை, உடற்பயிற்சி மையங்களுக்குப் போகிறவர்களுக்குத் தடுப்பூசி போட்ட சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய ராச்சியத்தில் வரும் ஏப்ரம் மாத ஆரம்பத்திலிருந்து மருத்துவ, சமூக சேவையினர் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்பது செப்டம்பரிலேயே அமைச்சர் ஜாவித்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கட்டாயத் தடுப்பூசி போடுதல் பற்றிய எண்ணங்கள் இல்லையென்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
கிறீஸ் தனது நாட்டின் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்கிறது. அவ்வயதுக்கு மேற்பட்டவர்களே நாட்டில் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 90 விகிதத்தினராகும். ஜனவரி 15 க்குப் பின்னர் அவ்வயதினர் தடுப்பூசி போட்டிராவிடின் 1,00 எவ்ரோவை மாதாமாதம் தண்டமாகக் கட்டவேண்டும்.
ஹங்கேரியில் அரச சேவை, மருத்துவ சேவை, கல்வித்துறையில் சேவையாளர்களாக இருப்பவர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் தமது ஊழியர்களுக்கான தடுப்பூசி முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
சுவீடன், டென்மார்க், பின்லாந்து,லத்வியா, சுவிஸ், ஸ்லொவேனியா, பல்கேரியா, போலந்து, நோர்வே ஆகிய நாடுகளில் இதுவரை தடுப்பூசிக் கட்டாயம் பற்றிய திட்டங்கள் ஏதுமில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்