அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக முதலாவது கறுப்பினப்பெண் பிரேரிக்கப்பட்டிருக்கிறார்.

தனது தேர்தல் வாக்குறுதிகளிலொன்றான அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்குக் கறுப்பினப் பெண்ணொருவரை நீதிபதியாக நியமிப்பது என்பதன் முதல் நகர்வை ஜனாதிபதி ஜோ பைடன் எடுத்திருக்கிறார். எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவரான கெதாஞ்சி பிரௌன் ஜக்ஸன் ஜனாதிபதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி ஆயுள்காலப் பதவியாகும். ஆயினும், அவர்களில் ஒருவரான 83 வயதான ஸ்டீபன் பிரேய்யர், தான் 

பதவியிலிருந்து விரைவில் ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார். அந்த இடத்துக்கான வேட்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் கெதாஞ்சி பிரௌன் ஜக்ஸன் அடுத்த கட்டமாக அமெரிக்காவின் செனட் சபையில் விசாரணைக்கு உள்ளாவார். அங்கே அவருக்குப் பெரும்பான்மை கிடைக்கும் பட்சத்தில் அவர் ஸ்டீபன் பிரேய்யரின் இடத்தை நிரப்புவார்.

“எங்கள் நாட்டிலிருக்கும் திறமைகளை வெளிக்காட்டும் காலமாக இதை நாம் கருதவேண்டும்,” என்று தனது வேட்பாளரைப் பகிரங்கமாக அறிவித்த ஜோ பைடன் தெரிவித்தார். செனட் சபையில் அவரது டெமொகிரடிக் கட்சியினரே பெரும்பான்மையாக இருப்பதால் ஜனாதிபதியின் வேட்பாளர் வெற்றிபெறுவார் என்றே கணிக்கப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்