ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் தடுப்பூசி போடுதல் சட்டமாக்கப்பட்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் அமுலுக்கு வரும்.
கடந்த வாரங்களில் மிக வேகமாகக் கொவிட் 19 தொற்றிவரும் நாடுகளிலொன்று ஜேர்மனி ஆகும். நாட்டின் 75 % மக்களாவது தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டுமென்ற ஜேர்மனிய அரசின் குறிக்கோள் எட்டவில்லை. இதுவரை சுமார் 68 % ஜேர்மனியர்களே தடுப்பு மருந்துகளைப் பெற்றிருக்கிறார்கள். எனவே தடுப்பூசி போடாதவர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
தடுப்பூசி போடாதவர்கள் உணவகம், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். பொது நிகழ்வுகளில் எத்தனை பேர் பங்கெடுக்கலாம், அங்கே முகக்கவச அவசியம் போன்றவைகள் பற்றியும், பாடசாலைகளில் முகக்கவசம் அணிதல் கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரவருக்கும் பிரதமர் ஒலொவ் ஷுல்ட்ஸுடன் ஆலோசித்தபின்பு அஞ்செலா மெர்க்கல் இவ்விபரங்களை அறிவித்தார். இவ்வருட இறுதியில் 30 மில்லியன் பேர் தடுப்பூசி பெற்றிருக்கவேண்டுமென்ற குறியை வைத்துச் செயற்படத் தீர்மானிக்கப்பட்டது.
பாதகமான நிலைமையைச் சுட்டிக் காட்டிப் பேசிய மெர்க்கல், மற்றவர்களுக்குத் தொற்றி, மரணத்துக்கு இட்டுச் செல்லக்கூடாதென்ற எண்ணத்துடனும் சகலரும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டார். அத்துடன் நாட்டின் பாராளுமன்றத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயப்படுத்தும் முடிவு பற்றி விவாதித்து அது பெப்ரவரி மாதமளவில் நாட்டில் அமுலுக்குக் கொண்டுவரப்படும் என்றும் குறிப்பிட்டார்.
73,209 கொவிட் 19 தொற்றுக்களும், 388 மரணங்களும் வியாழனன்று ஜேர்மனியில் பதியப்பட்டிருக்கின்றன. நாட்டில் தொற்றுக்குள்ளாகியிருப்பவரின் எண்ணிக்கை 102,178 ஆக அதிகரித்திருக்கிறது. நாட்டின் தெற்கு, கிழக்குப் பகுதிகளிலிருக்கும் பல மருத்துவமனைகளில் கொவிட் 19 நோயாளிகளுக்கு இடம் இல்லாததால் அவர்களை வேறு பிராந்தியத்துக்கு அனுப்பி வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்