நீ இருந்தால்!…

ஒரு காலில் கொக்கு
கடும் தவம்! ஒடைக்கரையில்
ஒதுங்கிடும் மீன் குஞ்சை..
தன் அலகில் இரையாக்கும்!

முதலையும் ஏரியில்
மூழ்கி உறங்கினாற் போல் ….
அமைதி காக்கும்
தன் உணவு கிட்டும் வரையே!

பதுங்கிடுமாம்!
பசித்த புலி…
வேட்டைக்கு!
பாய்ந்திடவே!

காலம் பார் தம்பி!
கருத்தாக இரு தம்பி!
ஞாலம் வழி வகுக்கும்!
குறிக்கோளில் பதுங்கி இரு!…

பறவையும்
உனக்கு ஆசான்!
விலங்கும்
உனக்கு ஆசான்!
மீனும்
உனக்கு ஆசான்!
உன்னிப்பாக நோக்கியிருந்தால்…!
உணர்த்தும் படி
நீ நடந்து விட்டால்…!
இயற்கையே நல்லாசான்!
வெற்றிக்கு பாடம் அப்பா!…

சோதனைகள் வரும் அப்பா!
வேதனையும் தரும் அப்பா!
பழிகளையும் சுமத்தும் அப்பா!
தப்பாது,
கதைகளையும் கட்டும் அப்பா!…

அஞ்சிடச் செய்யும் அப்பா!
கெஞ்சிட வைக்கும் அப்பா!
தஞ்சம் கேட்க வைக்கும்!
பஞ்சத்தால் வாட்டி வதைக்கும்!…

ஒதுக்கியே வைத்திடுவர்!
கதறிடச் செய்திடுவர்!
கொள்கையை அசைத்திடுவர்!
கோழை என கொக்கரிப்பர்!
வேலினைப் பாய்ச்சிடுவர்!
வேண்டும் துயர் தந்திடுவர்!….

பால் போல் பழகிடுவர்!
பகல் வேடம் போட்டிடுவர்!
பாதகம் செய்திடவே!
பவ்வியமாக இருந்திடுவர்….!
படுகுழியில்
தள்ளுதற்கே!

உன் நிலை தவறேல் தம்பி!
காலம் கனிந்தவுடன்!
கொக்கு போல்!
பதுங்கும் புலி போல்!
உன் நிலை வெற்றி தரும்!
காரியம் சித்தியாகும்!…

தமிழன்னை ஆலயம் காண
என் குறி இருப்பது போல்!
துயரமெல்லாம் ஏற்று நானும்
அகம் வலித்தும்
முகமலர்வது போல்!…

உன் குறிக்கோளில்
நீ இருந்தால்!
உன் குறி தப்பாது அப்பா!
சாதனைச் செய்வாய் அப்பா!
சரித்திரம் பேசுமப்பா!

எழுதுவது : கருங்கல் கி. கண்ணன்