எரிமலைவெடிப்பாலும், சுனாமி அலைகளாலும் பாதிக்கப்பட்ட டொங்காவுக்கு உதவி தயாராகிறது.
வெள்ளியன்றும், சனியன்றும் டொங்கா தீவுகளுக்கு வெளியே நீருக்குக் கீழிருக்கும் எரிமலை வெடித்ததால் அத்தீவுகளின் தலைநகரில் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக நியூசிலாந்தின் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
“சுனாமி அலைகளின் தாக்குதல் நுக்கா அலோபா நகரின் வடக்கில் பலமாக இருந்தது. படகுகளையும், பெரிய கற்களையும் அது நிலத்தை நோக்கி அள்ளி வீசியிருக்கிறது. நகரம் முழுவதும் எரிமலையின் சாம்பல் போன்றவைகளால் மூடப்பட்டிருக்கிறது. ஆனால், அமைதி நிலவுகிறது,” என்று நியூசிலாந்துப் பிரதமர் யசிந்தா ஆர்டன் தெரிவித்திருக்கிறார்.
டொங்கா தீவுகளுடனான தொலைத்தொடர்புகள் தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், அங்கிருக்கும் நியூசிலாந்துத் தூதுவராலயத்துடன் நியூசிலாந்து அரசு தொடர்புகொண்டதன் மூலமே சிறிதளவு விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.
வான்நிலை, நீர்பரப்பில் ஓரளவு அமைதி உண்டானது டொங்கா மக்களுக்கு உதவுவதற்கு நியூசிலாந்தும், ஆஸ்ரேலியாவும் தயாராகி வருகின்றன. முக்கியமாகத் தீவுகளின் மக்களுக்கான குடி நீர் வசதிகள் ஒழுங்குசெய்யப்படுகின்றன. அவசர உதவிகளை விமானம் மூலம் டொங்காவுக்குக் கொண்டுசெல்லும் ஏற்பாடுகள் நடந்த்கொண்டிருப்பதாக நியூசிலாந்து தெரிவித்தது.
சாள்ஸ் ஜெ. போமன்