தானியங்கி கார் மோதி அமெரிக்காவில் விபத்து

அமெரிக்காவில், அரிசோனா மாகாணத்தில். உலகின் வெவ்வேறு பாகங்களிலும் பரிசோதனையாக நடந்துவரும் தானே இயங்கும் காரொன்று ஒரு இரவு பாதசாரிகள் வழிச் சந்தியொன்றில் தனது துவிச்சக்கரவண்டியை உருட்டியபடி நடந்துகொண்டிருந்த ஒரு 49 வயதுப் பெண்ணை மோதியது.

ஊபர் நிறுவனத்தின் வாகனமொன்றில் ஒரு சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும், அந்த வொல்வோ வாகனம் “தானே இயங்கும் செயலி” மூலம் இயங்கிக்கொண்டிருந்தது.இருப்பினும் அந்த கார் பாதசாரி மீது மோதிவிட்டது.உடனடியாக ஊபர் நிறுவனம் தனது தானே இயங்கும் செயலியால் இயங்கும் கார்களைப் பரீட்சார்த்தமாக இயக்குவதை நிறுத்திவிட்டது. அமெரிக்க வாகனப் போக்குவரத்து ஆராய்வு அதிகாரம் நடந்த ஆபத்தைப் பற்றிய விபரங்களை அறிந்துகொண்டு ஆராய்வதில் இறங்கியிருக்கிறது.அமெரிக்காவில் மட்டுமன்றி உலகின் பல பாகங்களிலும் இப்படியான தானியங்கும் தனியார் வாகனச் செயலிகளைப் போக்குவரத்தில் இயக்குவது பற்றிய தொழில்நுட்ப பரீட்சை வெவ்வேறு தடங்களில், மட்டங்களில் நடந்து வருகிறது. இத்தொழில்நுட்பத்தில் எங்கெங்கே என்னென்ன நடக்குறது, எவ்வளவு வெற்றிபெற்றிருக்கிறது என்பது பற்றிய சகல விபரங்கள் இன்று எவரிடமும் இல்லை.பல ஐரோப்பிய நாடுகள், சீனா, கனடா போன்றவைகளையும் இங்கே குறிப்பிடலாம். யார் முதலில் இப்பரீட்சையில் வெற்றிபெறுவது என்ற போட்டியும் இவர்களுக்கிடையே இருப்பதை ஊகிக்கலாம். முதலில் வெற்றிகரமாக இயக்குபவர்கள் பெரும் இலாபமும், பிரபலமும் பெறுவார்கள் எனபதே அதன் காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அமெரிக்காவில் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் நாட்டின் போக்குவரத்து அதிகாரத்திடம் தமது தொழில்நுட்பத்தை விபரித்து அதன் ஆய்வுகூடப் பரீட்சை வெற்றிகளைக் காட்டி அச்செயலியை நிஜமான போக்குவரத்தில் பரிசீலிக்க அனுமதி பெறலாம். ஐரோப்பிய நாடுகளில் போக்குவரத்து அமைச்சு, பரீட்சிக்கும் நிறுவனத்துடன் சேர்ந்துதான் பரீட்சைக்கு அனுமதி கொடுக்கும். இதனால்தான் நடைபெற்ற முதலாவது மரண விபத்து அமெரிக்காவில் நடந்தது எனலாம்.

மனிதர்கள் வாகனங்களைச் செலுத்தும் இச்சமயத்தில் வருடாவருடம் 1 மில்லியன் மனிதர்கள் உலகம் முழுவதும் போக்குவரத்து விபத்துக்களில் இறக்கிறார்கள் 20 – 50 மில்லியன் பேர் காயப்படுகிறார்கள்.

ஒரு தொழில்நுட்பத்தைச் சாரதியாக அமர்த்திவிடும் காலம் வரும்போது இப்படியான விபத்துக்கள் மிகவும் குறைந்துவிடும் என்றே சகல ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்கள். இருப்பினும் சமூக மட்டத்தில் இருந்து பயம் சாரதி இல்லாமல் பயணத்தில் போவது பயம் என்பதே. அதை நிஜமாக்குவது போல இந்த விபத்தும் நடந்திருப்பது பலரின் பார்வையை திரும்பியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *