வரவிருக்கும் நாட்களில் அமெரிக்காவிலிருந்து 2,000 இராணுவ வீரர்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்படுவார்கள்.
அமெரிக்காவில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2,000 இராணுவ வீரர்களை வரவிருக்கும் நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப ஜோ பைடன் பச்சைக் கொடி காட்டியிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் போலந்து, ருமேனியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள்.
அமெரிக்காவிலிருந்து இராணுவத்தினர் ஐரோப்பாவுக்கு வரும்போது, ஏற்கனவே ஜேர்மனியில் தங்கியிருக்கும் 1,000 இராணுவ வீரர்கள் ருமேனியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அவர்களைத் தவிர பெந்தகன் மேலும் 8,500 இராணுவ வீரர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பத் தயார் செய்திருக்கிறது.
ஐரோப்பாவுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர் போரில் ஈடுபட அனுப்பப்படவில்லை. அவர்களை அனுப்பக் காரணம் நாட்டோ அமைப்பு ஐரோப்பாவைப் பாதுகாக்கத் தயார் நிலையில் இருப்பதைக் காட்டவாகும். அத்துடன், ரஷ்யா தனது இராணுவத்தினரை உக்ரேன் எல்லையையடுத்து நிறுத்தியிருப்பதற்கு எதிர்ப்பைக் காட்டவும் ஆகும் என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரகம் தெரிவிக்கிறது. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கும் பட்சத்தில் அமெரிக்கா உக்ரேன் தரப்பில் போரில் ஈடுபடாது என்று ஏற்கனவே ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார். உக்ரேன் தன்னைப் பாதுகாக்க அமெரிக்கா இராணுவ ஆலோசனையையும், ஆயுதங்களையும் மட்டும் வழங்கும் என்று அமெரிக்கா தெரிவிக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்