ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரேன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட சாத்தியம். பால்கன் நாடுகள் அதிருப்தி.

வியாழனன்று ஆரம்பிக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உயர்மட்ட மாநாட்டில் உக்ரேனை ஒன்றியத்தில் சேர்ப்பதற்கான விண்ணப்பத்தைக் கையாளும் முடிவு எடுக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் கணிக்கப்படுகிறது. அதே சமயம் ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற விரும்பிக் காத்திருக்கும் நாடுகளான வட மக்கடோனியா, அல்பானியா, செர்பியா ஆகியவை தமது விண்ணப்பங்களைப் பரிசீலிக்காமல் உக்ரேனை இடையே உள் நுழைய அனுமதிப்பது பற்றி அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.

சமீபத்தில் உக்ரேனுக்குக் கூட்டாக விஜயம் செய்திருந்த ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி நாட்டுத் தலைவர்களின் பலமான விருப்பத்தின் பேரிலேயே உக்ரேனின் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் முடிவு எடுக்கப்படும் சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது. அதை நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் விரும்பவில்லை எனினும் தமது கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. 

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதாயின் நாட்டில் ஜனநாயகக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும், சட்டம் ஒழுங்கு நிலைமை பலமாக இருக்கவேண்டும், பலமான பொருளாதார அபிவிருத்திக்கான அடிப்படை இருக்கவேண்டும் போன்றவை கோரப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றை உக்ரேன் நிறைவேற்றாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்காக கதவுகள் திறக்கப்படுவது பற்றி அதிருப்தியடைந்த செர்பியா, வட மக்கடோனியா அல்பானியா ஆகிய நாடுகள் நடக்கும் மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. அவர்களை மனம்மாற்றும் நடவடிக்கை கடைசி நிமிடங்களில் வெற்றிகரமாக நிறைவேறியது.

“உக்ரேன் ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த நாடு. அதை ஒன்றியத்தில் சேர்ப்பதற்கான ஆதரவை முழுமனதாக 27 நாடுகளிடம் பெறவேண்டும்,” என்று ஜேர்மனியின் பிரதம ஒலொவ் ஷோல்ட்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைச் சமாளிக்க மேற்கு பால்கன் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் உயர்மட்ட மாநாடு ஆரம்பமாகிறது. வட மக்கடோனியா, அல்பானியா ஆகிய நாடுகளின் அங்கத்துவ விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதை கிரீசும், பல்கேரியாவும் எதிர்க்கின்றன. செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவான ரஷ்யாவின் மீதான தடைகளைப் போட மறுத்து வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *