“ழ”கரம் படு(த்து)ம் பாடு

தமிழில் எழுதும்போதும் பேசும்போதும் எங்களில் பலருக்கும் உச்சரிக்கும் போது பெரும் தொல்லை தரும் எழுத்துக்களாக இருக்கும் எழுத்துக்கள் “ல,ள,ழ” ஆகிய மூன்றும்தான். குறிப்பாக எங்களில் பலரால் பேசும்போது தெளிவாக “ழ” வை உச்சரிக்க முடிவதில்லை. இன்று மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பேச்சாளர்களாக வலம்வரும் பலரும் இதற்கு விதிவிலக்கல்ல. எங்களில் வெகு சிலர்தான் ல, ள, ழ உச்சரிப்புகளைச் சரியாகச் செய்கிறோம்.

 தமிழ் எங்கள் மூச்சு, தமிழ் மொழி எங்கள் அன்னை என்று மந்திரம் போல்  உச்சரிக்கும் பலராலும் கூட “ழ”கரம் இடம்பெறும் பல சொற்களைச் சரியாக உச்சரிக்க முடிவதில்லை. உதாரணமாக வாழைப்பழத்தை எங்களில் பலர்  “வாளைப்பளம்” என்றுதான் சொல்லுகிறோம் என்பது கசப்பான உண்மை! தமிழைத் “தமிள்” என்றும் தமிழ் மொழியைத் “தமிள் மொளி”, தமில் மொளி” என்றும் சொல்லுவோர் எம்மத்தியில் அதிகம்.

 இப்படி “ழ”கரத்தை நாங்கள் உச்சரிக்கத் தடுமாறுவது ஒருபுறம் இருக்க, எப்போதுமே “ழ”கரத்தை சரியாக உச்சரித்துவிடக்கூடாது என்பதில் ஒரு கூட்டம் உறுதியாக இருக்கிறது. அதுதான் தொலைக்காட்சிகளில், வானொலிகளில் தொகுப்பாளர்களாக வேலை செய்யும் தமிழ் பேசும் நல்லுலகின் வாரிசுகள். அவர்களோடு தற்போது புலம்பெயர் தேசத்தில் மைக் பிடிக்கிறவர்களும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒன்று. அவர்கள் எங்களைப் போல பாரபட்சம் பார்ப்பதில்லை. “ழ”கரத்தை மட்டுமன்றி ஏனைய தமிழ் எழுத்துகளையும் அவை கொண்டு உருவாகும் வார்த்தைகளையும் தவறிக் கூட சரியாக உச்சரித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

 

இப்படி “ழ”கரத்தை சரியாக எழுதத் தெரிந்த, ஆனால் தவறாக உச்சரிக்கும் தமிழர் ஒருபுறம் என்றால் எந்த இடத்தில “ழ”கரம் வரவேண்டும், எந்த இடத்தில “ள”கரம் வரவேண்டும் என்று தெரியாமல் குழம்புவோர் எண்ணிக்கை இன்னொரு புறம் அதிகரித்துச் செல்கிறது. அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவரின் Facebook பதிவிலும் “குழப்பம்” என்பதற்குப் பதிலாக “குளப்பம்” என்று எழுதி அவர் குழம்பியிருந்தார். அதேபோல “வேலைப்பளு” என்பதை வேலைப்பழு” என்று எழுதுவதோடு அதுதான் சரியென்று சாதிப்பவர்களும் இருக்கிறார்கள். பளு  என்பது சுமை. செய்து முடிக்காத வேலையால் ஏற்படும் மனச்சுமையைக் குறிக்கப் பயன்படும் வார்த்தை என்பதால் வேலைப்பளு என்பதே சரியானது. ஆனால் இன்று வலைத்தளப் பதிவர்களும் மழைக் காளான் கவிஞர்களும் வேலைப்பழு என்று தவறாகவே பயன்படுத்துகிறார்கள்.  

 இவ்வாறு தமிழ் பேசும் நல்லுலகத் தமிழர்களிடன் “ழ”கரம் சிக்கிச் சிதைவடைவது ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் “ழ”கரம் உள்ள பெயர்ச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுவது வேறொரு விதமான தலைவலியாகப் பலருக்கும் இருக்கிறது.

 எனது சிறுவயதில் “பாலும் பழமும்” என்ற திரைப்படத்தின் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது “Palum Pazhamum” என்று எழுதியதை பார்த்தபோதுதான் “ழ” என்ற எழுத்தை ஆங்கிலத்தில் zha என்ற மூன்று எழுத்துக்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து கொண்டேன். “ழ”, “ழா” இரண்டுக்குமே zha என்பதைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். உதாரணமாக விழாவை Vizha என்றும் பழம் என்பதை Pazham என்றும் எழுதும் வழமை இருக்கிறது.

 இப்படித் தமிழ்ச் சொற்களை ஆங்கிலப்படுத்தும்போது “ழ”, “ழா” ஆகியவற்றை எழுதுவது பெரிய சிரமமாக இல்லாதபோதும் “ழ்” என்ற எழுத்தை ஆங்கிலத்தின் எழுதுவது இன்றுவரை பலருக்குப் பெரும் தகராறாகத்தான் இருக்கிறது. உதாரணமாக சிலர் “தமிழ்” என்பதை ஆங்கிலத்தில் Thamizh என்று எழுதுகிறார்கள். ஆனால் சிலருக்கு zh மட்டும் சேர்த்து Thamizh என்று எழுதும்போது அது முழுமையடையவில்லை என்ற எண்ணம் எழுவதாலோ என்னவோ Thamizhi என்றும் எழுதுகிறார்கள். ஆனால் அது தமிழில் “தமிழி” ஆகிவிடும் ஆபத்தைப் அவர்கள் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள்.

 அதேபோல “ழே” என்ற எழுத்து வரக்கூடிய புகழேந்தி என்ற பெயரை Pukazhenthi என்று எழுதுகிறார்கள். இங்கு “ழே” என்பதற்கு “zhe” என்பது பயன்படுத்தப்படுகிறது.

 ஆனால் “ழ”கரம் உள்ள பெயர்ச் சொற்களை ஆங்கிலத்தில் zh, zha, zhi, zhe போன்ற எழுத்துக்களைப் பயன்படுத்தி எழுத முற்படும் வழமை தமிழர் மத்தியில்தான் இருந்து வந்திருக்கிறது. ஆங்கிலேயர் எமக்காக அத்தனை சிரமப்படத் தயாராக இல்லை. அவர்கள் தமிழைத் “Tamil” என்றும் அழகன் என்ற பெயரை “Alagan” என்றும்தான் எழுதுகிறார்கள்.

 ஆனால் தற்போதைய தமிழர்களில் சிலரும் Zh, Zha, zhe என்பவற்றைப் பயன்படுத்த விருப்பமில்லை போலத் தெரிகிறது. அவர்கள் சில மாற்று வழிகளை நாடுகிறார்கள். அது சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்க இவர்கள் கையில் “ழ”கரம் என்ன பாடுபடுகிறது என்பதுதான் மிகவும் சுவாரசியமானது.

 உதாரணமாக மகிழம் என்ற மரத்தின் பெயரை அப்படியே ஆங்கிலத்தில் எழுதும்போது “Magizham” என்று அல்லது “Mahizham” என்று எழுதுபவர்கள் உண்டு. ஆனால் சிலரோ இதனை Makilam என்றும் Mahilam என்றும் எழுதுகிறார்கள். Mahilam எனும்போது அது தமிழில் மகிலம் என்றும் Makilam என எழுதும்போது அது தமிழில் மகிளம் என்றும் ஆகிவிடுகிறதல்லவா? வேறு சிலரோ இன்னுமொரு எழுத்தைச் சேர்த்துக்கொண்டு Maghilam என்றும் எழுதுகிறார்கள். அதை மீளத் தமிழில் எழுதினால் மக்கிலம் ஆகிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

 அதேபோல புகழேந்தி என்ற பெயரை Pukazhenthi என்று எழுதுபவர்கள் ஒருபுறம் இருக்கச் சிலர் Pukalenthi என்று எழுதுகிறார்கள். இப்போது அது புகழேந்தியா, புகலேந்தியா அல்லது புகளேந்தியா என்பது எழுதியவருக்கே குழப்பத்தைத் தந்துவிடும் அல்லவா?

 இப்படி “ழ”கரம் படும்பாட்டைப் பார்க்கும்போது இனிவரும் நாட்களில் இந்த “ழ”கரத்தைக் காப்பாற்ற அந்த ஆண்டவனே வந்தாலும் முடியாதோ என்று பயமாக இருக்கிறது. அதனால் ழ”கரம் கோமாவுக்குள் போவதற்கு முன்னர் இன்றுள்ள தமிழ் மூதறிஞர்கள் இணைந்து “ழ”கரத்தைக் காப்பாற்ற ஏதாவது செய்தால் நல்லது.

 எழுதுவது : வீமன், கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *