மனித உரிமைச் சட்டங்களைத் தமக்கேற்றபடி மாற்றியெழுத விரும்புகிறது ஜோன்சன் அரசு.

கருத்துரிமையை மேலும் பலப்படுத்தி, பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் விதமாக மனித உரிமைச் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று புதனன்று பிரிட்டிஷ் அரசு குறிப்பிட்டது. தமது எண்ணங்களை மசோதாவாக வடிவமைத்துப் பாராளுமன்றத்தி சமர்ப்பிக்கவிருப்பதாக ஜோன்சன் அரசு அறிவித்தது. அவர்கள் கருத்துரிமைகளைப் பலமாக்குவதாகச் சொன்னாலும் உண்மையில் ஒரு சாராரின் உரிமைகளை மட்டுப்படுத்துவதே ஆளும் கொன்சர்வடிவ் கட்சியின் நோக்கம் என்று அந்த எண்ணத்தை எதிர்ப்பவர்கள் விமர்சிக்கிறார்கள்.

ஜோன்சன் அரசு ஐக்கிய ராச்சியத்துக்குக் கடல் வழியாக வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்ப முற்பட்டபோது கடைசி நிமிடத்தில் அது ஐரோப்பிய நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டதை அடுத்தே மேற்கண்ட மனித உரிமைகள் மாற்றும் சட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

உண்மையிலேயே கடைசி நிமிடங்களில் நிறுத்தப்பட்டது ருவாண்டா பறக்கவிருந்த அகதிகள் விமானம். – வெற்றிநடை (vetrinadai.com)

அச்சட்டங்கள் மூலம் மனித உரிமை பற்றிய கோரல்களுக்கான எல்லை மட்டுப்படுத்தப்படும். அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களை ஐக்கிய ராச்சியத்தின் பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்றும் முடிவெடுக்கப்படும். ஐக்கிய ராச்சியத்தில் வாழும் வெளிநாட்டவர்கள் குற்றங்கள் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கான மேன்முறையீட்டுச் சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படும். 

மனித உரிமைகள் என்ற பெயரில் வரும் அற்பத்தனமான விடயங்களை ஒதுக்கிவிடுவதே தமது சட்டத்திருத்தத்தின் நோக்கம் என்கிறது ஜோன்சன் அரசு. பொது அறிவுக்குப் புரியக்கூடிய விதத்தில் புதிய சட்டங்கள் அமையும் அதே சமயம் அவை ஐரோப்பாவின் அடிப்படை மனித உரிமைகள் பட்டயத்துக்கு ஒவ்வானதாகவே அமையும் என்று நீதியமைச்சர் டொமினிக் ராப் தெரிவித்தார்.

ஜோன்சன் அரசு ஒதுக்க விரும்பும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்புள்ளது அல்ல. அது ஐரோப்பாவின் 46 நாடுகளும் மதிக்கும் ஒரு சர்வதேச நீதிமன்றம் ஆகும்.

“ஜோன்சன் அரசின் நோக்கம் அரசாங்கம் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்க முற்படும் தனிமனிதர்களை ஒடுக்குவதாகும்,” என்று வன்மையாகக் கண்டிக்கிறது அம்னெஸ்டி இண்டர்நஷனல்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *