வட்டி வீதம் 0.25 ஆக உயர்ந்தது |இங்கிலாந்தின் மத்திய வங்கி அறிவிப்பு

கடந்த வருட விலைவாசி உயர்வை சமாளிக்கும் ஏற்பாடாக , இங்கிலாந்தின் மத்திய வங்கி( Bank of England) வட்டி வீதத்தை 0.1 சதவீதத்திலிருந்து 0.25 ஆக உயர்த்தியுள்ளது.

கடந்த மூன்று வருடங்களில் முதற்தடவையாக இந்த உயர்வை அறிவித்துள்ளது.

தேசிய புள்ளிவிபரவியல் திணைக்கள அறிக்கைகளின்படி விலையுயர்வுகள் 5.1 சதவீதத்தால் உயர்வடைந்தமை குறித்து நேற்று செய்திகள் வெளியாகியதைத் தொடர்ந்து இந்த வட்டி வீத உயர்வு பற்றிய அறிவிப்பு இன்று வெளியானது.

இதுவரை காலமும் வீட்டுக்கடன் பெற்றவர்கள் மீளச்செலுத்தும் தொகை குறைந்தளவு 10 பவுண்ட்ஸ் இலிருந்து 15 பவுண்ட்ஸ் அளவிற்கு உயரும் என குறிப்பிடப்படுகிறது.அவரவர் தனிப்பட்ட வீட்டுக்கடன் வகையைப் பொறுத்து அவை வேறுபடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரிட்டனில் தற்போது திரிபடைந்த ஒமிக்ரோன் வைரஸினால், எதிர்கால நாள்கள் சவாலான நாள்களாக இருக்கும் என எதிர்வுகூறப்படுகின்ற பின்னணியில் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்தியடைச்செய்துள்ளது.

அதேவேளையில் இந்த குறிப்பிட்ட ஒமிக்கரோன் தொற்று சமூகப்பரவல் அதிகரிப்பு எவ்வளவு தாக்கத்தை எதிர்காலத்தில் செலுத்தும் என்பதை எதிர்வுகூறமுடியாத போதிலும் வரும் 2022 இன் முதல் மாதங்களில் நிச்சயம் பொருளாதார பின்னடைவு அல்லது வளர்ச்சி வேகம் குறைவாக இருக்குமெனவும் இங்கிலாந்து மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.