தாய்லாந்தின் அரசகுடும்பத்தை விமர்சித்தவருக்கு 43 வருடங்கள் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை.
அஞ்சன் பிரீலெர்ட் என்ற 63 வயதுப் பெண்மணிக்கு 43 வருடங்கள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சட்டவிதி 112 என்று தாய்லாந்தில் பிரபலமாகக் குறிப்பிடப்படும் “அரசகுடும்ப நிந்தனை” கடுமையாகத் தண்டிக்கப்படுவது வழக்கம்.
2014 ம் ஆண்டு நடந்த இராணுவ ஆட்சிக் கைப்பற்றலின் பின்னர் இந்தக் குற்றம் சுமத்தப்பட்ட 169 வது ஆள் அஞ்சனாகும். முதலில், அரசகுடும்பத்துக்கு எதிராக விமர்சித்த 29 குற்றங்களுக்கு அஞ்சனா 87 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவர் அக்குற்றங்களை ஒத்துக்கொண்டதால் அவற்றை 43 வருடங்களாகக் குறைத்ததாகத் தெரிகிறது.
“இந்தத் தண்டனை மிகப் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அரச குடும்பத்தினர் விமர்சனங்களை எதிர் நோக்கமறுப்பதுமன்றி, விமர்சிப்பவர்களை மிகவும் கடுமையாகத் தண்டிக்கிறார்கள்,” என்று மனித உரிமைகளைக் கண்காணிக்கும் ஹியூமன் ரைட்ஸ் வோட்ச் அமைப்பு குறிப்பிடுகிறது.
கடந்த 15 ஆண்டுகளாகத் தாய்லாந்தில் தொடர்ந்து அரசியல் குழப்பம் நடந்து வருகிறது. நாட்டு மக்கள் இரண்டு பக்கமாகப் பிளவுண்டிருக்கிறார்கள். எனவே நாட்டின் இராணுவ அரசு பல எதிர்ப்புக்களையும், பேரணிகளையும் நேரிட்டு வருகிறது.
அரசை விமர்சிப்பவர்களில் ஒரு சாரார் நாட்டின் அரச குடும்பத்தினரின் நடவடிக்கைகளையும் விமர்சிக்கிறார்கள். எனவே, இராணுவம் அவ்வப்போது அரச குடும்பத்திற்கு எதிரான விமர்சனம் என்று குடிப்பிட்டுச் சிலரைத் தண்டிக்கிறது. கடந்த சில வருடங்களாக அரச குடும்பம் நிறைய விமர்சனங்களை நேரிட்டு வருகிறது. ஆனால், கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பலமாக இராணுவ அரசு, அரச குடும்பம் மீதான எதிர்ப்பணிகள் பலத்திருப்பதால் முதல் தடவையாக 50 பேரை அரச குடும்பத்தினருக்கு எதிராக விமர்சித்ததாகக் கைது செய்தார்கள்.
2016 இல் தாய்லாந்து அரசன் மஹா வஜ்ரங்கூன் இறந்தபின் பட்டத்துக்கு வந்த மகன், அரச குடும்பம் பற்றிய விமர்சனங்களுக்காக எவரையும் தண்டிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஆயினும் பிரதமர் அப்படியான விமர்சனங்களைத் தண்டிப்பேன் என்று எச்சரித்து வந்திருந்தார்.
தண்டிக்கப்பட்டிருக்கும் அஞ்சன் 2014 இல் குறிப்பிட்ட குற்றம் செய்ததாகக் கைது செய்யப்பட்டிருந்தார். 2018 வரை அவரைச் சிறையில் வைத்திருந்தார்கள். தற்போது அவரை நீதிமன்றத்தில் நிறுத்திக் கடுமையாகத் தண்டித்ததன் மூலம் தாய்லாந்தின் இராணுவ அரசு ‘தான் எவ்வித விமர்சனங்களையும் இனிமேல் தாங்கத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறது’, என்று புரிந்துகொள்ளவேண்டுமென்று மனித உரிமைகளுக்காகத் தாய்லாந்தில் போராடும் அமைப்புக்கச் சுட்டிக் காட்டுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்