மருத்துவப் பாவிப்புக்காக கஞ்சாவைப் பாவிக்க அனுமதித்த தாய்லாந்து கிரதொம் இலைகளைப் போதைப் பொருள் பட்டியலிலிருந்து நீக்கியது

தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் பப்புவா நியுகினியா ஆகிய நாடுகளில் நோவுகளிலிருந்து விடுதலை பெறப் பாவிக்கப்படும் பாரம்பரிய மருந்துப் பொருளாக இருந்துவருகிறது கிரதொம் [kratom] செடிகளின் இலைகள். 1979 இல் அதன் பாவிப்பைச் சட்டத்துக்கு எதிரானது என்று வகுத்த தாய்லாந்து இப்போது அதன் சாதாரணப் பாவிப்பை அனுமதிக்க முடிவுசெய்திருக்கிறது.

மூளையின் எந்தப் பகுதிகளின் சுரப்பிகளை மோர்பீன் தூண்டுகிறதோ அவைகளையே மிக மெல்லிய அளவில் சீண்டுகிறது கிரதொம். அதனாலேயே அது ஒரு போதைப் பொருள் என்று முத்திரை குத்தப்பட்டது. ஆனால், சர்வதேச அளவில் அது ஒரு தடைசெய்யப்பட்ட செடி அல்ல. உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் அதைத் தடை செய்யவேண்டுமா என்று பரிசீலிக்கவிருப்பதாக அறிவித்தது.

பாரம்பரியமாக மக்கள் கிராமங்களில் நீண்ட காலம் பாவித்து வந்த கிரதொமை மீண்டும் பாவிக்கத் தாய்லாந்து அனுமதித்திருப்பதை ஒரு சாரார் வரவேற்கின்றனர். மீளாய்வு செய்யப்பட்ட அந்த அனுமதியானது வருடாவருடம் தாய்லாந்து அரசுக்கு 50 மில்லியன் டொலரைச் சேமிக்க உதவுமென்று குறிப்பிடப்படுகிறது. சிறிய போதைப்பொருள்ப் பாவிப்புக்களுக்க்கும் சுமார் 10 வருடச் சிறைத்தண்டனை விதிக்கும் தாய்லாந்தில் கிரதொம் பாவிப்பவர்கள் மீதான வழக்குகளுக்குப் பெரும் செலவு உண்டாகிறது.  அதைப் பாவித்ததற்காகச் சிறையிலிருக்கும் சுமார் 1,000 பேரைத் தாய்லாந்து விடுதலை செய்யவிருக்கிறது.  

Mitragyna speciosa விஞ்ஞானப் பெயரைக் கொண்ட கிரதொம் இலைகளைப் பாவிப்பதைப் பற்றிச் சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் மருத்துவப் பாவனை அதிகாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதையடுத்து அவைகளுக்கான கிராக்கி அமெரிக்காவிலும் அதிகமாகியிருக்கிறது. 

இந்தோனேசியாவில் கிரதொம் பாவனை அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சமீப வருடங்களில் சில அரசியல்வாதிகள் அதை சட்டத்தின் மூலம் தடுக்கும்படி அரசைக் கோரி வருகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *