மியான்மாரை மீண்டும் இராணுவம் கைப்பற்றியதாக அறிவிக்கப்படுகிறது.
சமீப காலத்தில் பல தடவைகள் எச்சரித்தது போலவே மியான்மாரின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றிவிட்டது. நாட்டின் தலைவர் அவுன் சன் ஸு ஷி உம் மேலும் சில தலைவர்களும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.
நவம்பரில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சி NLD80 விகிதமான வாக்குகளைப் பெற்று மிகப்பெரும் வெற்றியடைந்திருந்தது. 2015 இன் பின்னர் ஜனநாயக முறைப்படி நடந்த முதல் தேர்தல் அதுவேயாகும். பாராளுமன்றத்தில் 25 விகிதமான இடங்கள் இராணுவத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவர்களால் முன்னரைப் போல முக்கிய முடிவுகளில் இறுதி வாக்கையளிக்க முடியாதென்ற நிலையிருந்தது.
ஆளும் கட்சியின் காரியதரிசி மியு நியுந்த் நாட்டு மக்களை அமைதியாக இருக்கும்படி கேட்டிருக்கிறார். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. நாட்டின் சிறுபான்மை இனங்கள் வாழும் மாகாணங்களின் ஆட்சித் தலைவர்களெல்லோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இராணுவத்தின் உத்தரவுப்படி நாட்டின் வங்கிகளெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன. தம்மால் தான் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முடியுமென்று இராணுவம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
கடந்த வாரமே இராணுவம் நாட்டைக் கைப்பற்றுமென்ற சந்தேகம் எழுந்ததால் ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் மற்றும் பல நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் அப்படியொரு நகர்வை ஏற்கமுடியாதென்று எச்சரித்து வந்தன. தாய்லாந்தும், கம்போடியாவும் நடந்திருப்பது மியான்மாரின் உள்நாட்டுப் பிரச்சினையென்றும் தமக்கு அதைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லையென்றும் தெரிவித்திருக்கின்றன.
மியான்மாருடன் நெருங்கிய தொடர்புடைய நாடுகள் சீனாவும், இந்தியாவுமாகும். சீனா இராணுவத்தின் நகர்வுக்குப் பின்னரும் தனது ஆதரவைக் கொடுக்குமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா “நிலைமை தம்மைக் கவலைக்கிடமாக்கியிருக்கிறது, ஜனநாயகம் வெற்றிகொள்ளவேண்டும்,” என்று குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்