உலகின் முதலாவது நாடாக டிஜிடல் கொரோனாக் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தப்போவதாக அறிவித்தது டென்மார்க்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேகமாகத் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கும் நாடான டென்மார்க் அடுத்த கட்டமாகச் சமூகத்தைத் திறக்கும்போதான தொற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்திருகிறது. அதன் விளைவான திட்டமே எவரும் இலகுவாகக் காவிக்கொண்டு திரியக்கூடிய கொரோனாக் கடவுச்சீட்டு ஆகும்.
டென்மார்க்கின் வர்த்தக அமைச்சர் மோர்ட்டன் போடஸ்கூவ் அரசாங்கம் சிந்தித்துவரும் கொரோனாக் கடவுச்சீட்டுகள் தயாராக சுமார் மூன்று மாதங்களாகலாம் என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
“அந்த டிஜிடல் அடையாளத்தை எதற்காகப் பாவிப்பது என்பது பற்றிய எல்லைகளை இன்னும் நாம் தெளிவாக்கிக்கொள்ளவில்லை. எவருக்கு எந்தெந்தத் தேவைகளுக்காக அது உதவும் என்பது பற்றிய விவாதங்களில் நாம் இப்போது ஈடுபட்டிருக்கிறோம். எப்படியும் எதிர்காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களில் அப்படியான ஒரு தீர்வு கட்டாயம் தேவைப்படும்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதைத் தவிர உள்நாடுகளில் கலாச்சார, பொழுதுபோக்கு, மகிழ்வூட்டல் போன்றவைகளைக் கூட்டமாக அனுபவிக்க அப்படியொரு அடையாளத்தை ஒவ்வொருவரும் காவித்திரியவேண்டியதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் வர்த்தககர்கள் அமைப்புக்கள் அப்படியொரு தீர்வை மிகவும் ஆவலுடன் எதிர்பர்ப்பதாகவும் அவைகளை வேலைத்தளங்களிலும் பாவிக்கத் தேவையாயிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
டென்மார்க்கில் எல்லைகள் தற்போது சகல பக்கங்களில் மூடியிருக்கின்றன. உணவுக்கடைகள், மருந்துக்கடைகள் தவிர்ந்த தனியார் நிறுவனங்களெல்லாம் பெப்ரவரிக் கடைசிவரை பூட்டியே இருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்